தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் விழா நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக, படகு சவாரி துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் படகு குழாம் அமைத்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சாரல் சீசனில் குளத்தில் நீர் இருப்பு காலத்தில் படகு சவாரி நடத்தப்படும்.
இந்த ஆண்டில் மே மாத இறுதியில் சாரல் மழை தொடங்கியது. சாரல் சீசன் களைகட்டியுள்ள நிலையில், படகு சவாரியை தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், படகு சவாரி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து, படகு சவாரியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்.பி-யான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “இந்த ஆண்டு சாரல் சீசன் தொடங்கி படகு குழாமில் தண்ணீர் இருப்பதால் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு அரை மணி நேரத்துக்கு இரு நபர் மிதி படகுக்கு ரூ.150, நான்கு நபர் மிதி படகுக்கு ரூ.200, நான்கு நபர் துடுப்புப் படகுக்கு ரூ.250, தனிநபர் படகுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். இந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் விழா நடத்தப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், குற்றாலம் மேலாளர் சக்திவேல், மண்டல கணக்கு அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் சீசன் காலத்தில் சாரல் விழா நடத்தப்படும். கடந்த 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சாரல் விழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ஆகாஷ் முயற்சியால் சாரல் விழாவுடன், புத்தக திருவிழா, உணவுத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு சாரல் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஆண்டுதோறும் சாரல் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த ஆண்டு சாரல் விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.