பாஜகவை விட்டுவிட்டு திமுகவை எதிர்ப்பது மட்டுமே இனி அதிமுகவுக்கு கைகொடுக்குமா?

By வீரமணி சுந்தரசோழன்

"நான் பழைய பழனிசாமி என நினைத்தீர்களா ஸ்டாலின் அவர்களே..." - அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்றதுமே இப்படி கர்ஜிக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுகவின் ‘எனர்ஜி பூஸ்டராக’ இருக்கும் திமுக எதிர்ப்பு பேச்சுகள் மீண்டும் அதிமுகவிலிருந்து எகிற ஆரம்பித்துவிட்டன. அதேசமயம், வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமே அதிமுகவை கரைசேர்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எம்ஜிஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை திமுக அதிமுகவை எதிர்ப்பதும், அதிமுக திமுகவை எதிர்ப்பதும் மட்டுமே தமிழக அரசியலாக இருந்தது. இரண்டு தரப்பிலிருந்தும் மாறி மாறி வார்த்தைப் போரை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் இந்திய அளவில் தெரிந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியல் களத்திலும் எதிரொலித்தது. அதனால்தான் அந்தத் தேர்தலில் திமுகவை ஓரமாக ஒதுக்கிவிட்டு, “மோடியா... இந்த லேடியா?” என்று நேரடியாகவே பாஜகவுடன் மோதினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏகப்பட்ட பூகம்பங்கள் வெடித்தன. அதையெல்லாம் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, முதலில் ஓபிஎஸ்சையும் பின்னர் ஈபிஎஸ்சையும் ஆதரிப்பது போல் ஆட்டுவித்தது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குடைச்சல்கள் கொடுக்கப்பட்டன. இதனால், பாஜக தயவு இருந்தால் தான் சசிகலா அண்ட் கோ- வை சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தை அதிமுக தலைவர்கள் மத்தியில் விதைத்தது. இதனால், 2019 மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் அடிமட்டத் தொண்டனின் எண்ணங்களுக்கு விரோதமாக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது அதிமுக. இந்தக் கூட்டணியால் அதிமுகவுக்கு பலன் கிடைத்ததோ இல்லையோ பாஜக கணிசமான பலனை அறுவடை செய்தது.

இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு பிரிவுகள் ஜெயலலிதா பெயரைச் சொல்லி இயங்குகின்றன. இந்த நான்கு பிரிவுகளுமே திமுகவை மட்டுமே எதிர்க்கின்றன. ஜெயலலிதா பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் இவர்கள் யாருக்குமே பாஜகவை எதிர்க்க துணிவில்லை என்பதுதான் உண்மை.

2014-க்கு முன்பு வரை திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்குப் போகும், அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்குப் போகும் அவ்வளவுதான். இத்தோடு பாஜக எதிர்ப்பு வாக்குகளும் தமிழகத்தில் கணிசமாக உண்டு. ஜெயலலிதா இருந்தவரை இந்த வாக்குகளை திமுகவும் அதிமுகவும் சமமாகப் பிரித்துக் கொண்டன. ஆனால். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக மொத்தமாக பாஜகவின் பிடிக்குள் போய்விட்டதால் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுகவே முழுமையாக அறுவடை செய்து வருகிறது.

திமுக எதிர்ப்பு மட்டுமே போதுமானதா?

ஊழல், குடும்ப அரசியல் - இந்த இரண்டு பழிகளைத்தான் திமுக மீது அதிமுக வழக்கமாக சுமத்தும். ஆனால், இந்த இரண்டுமே இப்போது அதிமுகவுக்கும் சொந்தமாகிவிட்டது. எனவே, இனி இவர்கள் குடும்ப அரசியல் பேசினாலோ திமுக ஊழல்கட்சி என்று சொன்னாலோ மக்கள் மன்றத்தில் அது அவ்வளவாய் எடுபடாது. ஆக, தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் இப்போது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிவிட்டன. இதனால் இந்த இரண்டு கட்சிகளையும் பிடிக்காத மக்கள் மாற்று ஒன்றை தேடுகிறார்கள். அந்த மாற்று நாங்கள் தான் என களமாடுகிறது பாஜக.

தற்போது, அதிமுக மட்டுமல்ல... பாஜகவும் திமுகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் மடியில் கனம் இல்லாததால் அதிமுகவைவிட இன்னும் மூர்க்கமாகவே திமுகவை எதிர்க்கிறது பாஜக. அந்தக் கட்சியின் தலைவர் அண்ணாமலை தினமும் திமுகவுக்கு எதிராக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கிளப்பி அதன் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறார். சீமான், தினகரன் போன்ற தலைவர்களும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுகவை சீண்டுகிறார்கள். எனவே, இனிமேல் திமுக எதிர்ப்பு வாக்குகள் அப்படியே அதிமுக பெட்டிக்குள் வந்து விழும் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் பங்குபோட பல கட்சிகள் இப்போது களத்தில் நிற்கின்றன.

உயரும் பாஜக எதிர்ப்பு வாக்குவங்கி!

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான வாக்கு வங்கி எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு பாஜகவுக்கு எதிரான வாக்குவங்கியும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இது அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் அதிமுகவையும் வெகுவாகப் பாதிக்கிறது. இதை உணர்ந்தோ தெரிந்தோ தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனாலும் மக்கள் நம்பத் தயாரில்லை. என்றைக்கு இருந்தாலும் இவர்கள் மீண்டும் கைகோத்து விடுவார்கள் என்று தெரிந்ததால் பெருவாரியான மக்கள் திமுகவுக்கே வாக்களித்தார்கள். இதனால் அதிமுக மூன்றாவது நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்ட அதிசயமும் நடந்தது.

தமிழகத்தில் மட்டுமல்ல... தேசம் முழுமைக்குமே பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியானது கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் சாதுர்யமாக சமாளித்து வென்று வருகிறது பாஜக. அப்படித்தான் உபியில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சாமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என மூன்றாக கூறுபோட்டார்கள். கோவாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் என உடைத்தார்கள். பிஹாரில் ஆர்ஜேடி, எல்ஜேபி, ஓவைசி கட்சி என மூன்றாக பிரித்தார்கள். தமிழகத்தில் அப்படி பிரித்தாளும் கொள்கையைப் புகுத்த பாஜகவுக்கு இப்போதைக்கு வழியில்லை. அதனால் அதிமுகவை கொம்பாகப் பிடித்துக் கொண்டு தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு வருகிறது. இதை உணராமல் இன்னமும் பாஜகவுக்கு வால்பிடித்து நிற்கிறது அதிமுக.

அழிவுப் பாதையை நோக்கி அதிமுக?

திமுகவை மட்டும் எதிர்ப்பது அதிமுகவுக்கு கைகொடுக்குமா என பத்திரிகையாளர் அய்யநாதனிடம் கேட்டோம். “எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும்கூட மாநில உரிமைகள் என்று வரும்போது அவர்கள் மத்திய அரசை எதிர்க்கத் தயங்கியதில்லை. ஆனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தங்களின் ஊழல் வண்டவாளங்களை மத்திய அரசு தூசு தட்டிவிடுமோ என்று பயந்து மாநில உரிமை குறித்து எதுவும் பேசுவதில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து நின்றது. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்தது. பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக வென்றால் அது மத்தியில் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் என பேச்சு எழுந்தது. அந்த விமர்சனத்தை உடைக்கும் விதமாகவே ‘மோடியா... லேடியா?’ என குரலை உயர்த்தினார் ஜெயலலிதா. அவரது பேச்சை நம்பி மக்களும் அவருக்குப் பெருவாரியான வெற்றியைத் தந்தார்கள்.

அதுபோல தமிழகத்தின் உரிமை, மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் எதையுமே எதிர்க்காமல் வெறுமனே திமுகவை மட்டுமே திட்டிக்கொண்டிருந்தால் அதிமுகவால் இனி மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது. அண்மை தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கும், அதிமுகவின் படுதோல்விக்கும் காரணம் பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கிதான். இதனை உணர்ந்தாலும் ஜெயலலிதா பேரைச் சொல்லி அரசியல் நடத்தும் 4 அணிகளுமே பாஜகவை எதிர்க்கத் துணியமாட்டார்கள்.

இதேநிலை இனியும் நீடித்தால் நடுநிலையான வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு அறவே கிடைக்காது. அதிமுகவை உடைத்து அதன் மூலமாக வளர்ந்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் கணக்கு. இதை உணராமல் இருந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கியே செல்லும்” என்றார் அவர்.

அய்யநாதன்

ரெய்டுகளுக்குப் பயப்படுகிறார்கள்!

பாஜகவை எதிர்க்கத் தயங்கும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பேசிய பத்திரிகையாளர் ப்ரியன், “ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு தரப்புமே ரெய்டுகளுக்குப் பயந்து பாஜகவை எதிர்க்க அஞ்சுகிறார்கள். மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடத்தினால் அதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் மத்திய அரசின் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு குறித்து வாயே திறக்கவில்லை.

ப்ரியன்

ஆட்சியில் இருந்தபோதும் ரெய்டுகளுக்கு பயந்த அதிமுகவினர் இப்போதும் பயப்படுகின்றனர். இவர்களின் இந்த சுயநல அரசியலால் தான் அதிமுக தனது 12 சதவீத வாக்குவங்கியை தற்போது இழந்துள்ளது. ஜெயலலிதா வழியில் மத்திய - மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வலுவான எதிர்க்கட்சி என பெயர் வாங்க வேண்டும் என்றுதான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.

இப்போது திமுக எதிர்ப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைப்பதில்லை. பாஜக எதிர்ப்பு வாக்குகளும் அதற்கு கிடைப்பதில்லை. இனியும் மத்திய அரசின் கொள்கைகளையும், பாஜகவையும் எதிர்த்து அரசியல் செய்ய அதிமுக தயங்கினால் அந்தக் கட்சியின் வாக்குவங்கி இன்னும் வேகமாகக் கரைந்து போகும்.” என்றார்.

திமுக எதிர்ப்பில் உதித்தது தான் அதிமுக. திமுகவில் நடக்கும் தவறுகள் எல்லாம் இங்கே நடக்கக்கூடாது என அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் விரும்பினார். ஆனால், இப்போதிருக்கும் அதிமுக தலைகள் அதையெல்லாம் அப்பட்டமாய் மீறிவிட்ட நிலையில், இனியும் திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தையும் அவர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE