விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி, பொது பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை

By மு.வேல்சங்கர்

சென்னை: நெடுந்தொலைவு செல்லும் விரைவு ரயில்களில், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, பொது பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக விரைவு ரயில் போக்குவரத்து உள்ளது. விரைவு ரயில்களில் பயணிக்க, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. பண்டிகை மற்றும் கோடை விடுமுறை நாட்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகிறது.

முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் ஆகியோர் விரைவு ரயிலின் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வது வழக்கம். ஆனால், இப்போது அந்த வசதியும் படிப்படியாக பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, கோடை விடுமுறை காரணமாக, பல்வேறு விரைவு ரயில்களில் முன்பதிவு டிக்கெட் உறுதியாகாத பயணிகள், மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் ஓரமாக நின்று கொண்டே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பொது பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டதே என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த வாரம், சென்னை - திருவனந்தபுரம் மெயில் விரைவு ரயிலில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஏராளமான பயணிகள் கழிப்பறை அருகே நின்றபடி பயணம் செய்தனர். அவர்களில் பலரிடம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்கள் இருந்தன. இதனால், டிக்கெட் பரிசோதகர் அவர்களை வெளியேற்ற முயன்றார்.

ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபோல, சம்பவங்கள் வார இறுதி நாட்களில் நடப்பது வழக்கமாகி விட்டது. இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: “விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதற்கு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியில் டிக்கெட் உறுதியாகவில்லை எனில், பொது பெட்டியில் பயணிப்போம். இப்போது, பொது பெட்டிகளையும் குறைத்து விட்டனர்.

அதேநேரம், அதிக கட்டணம் கொண்ட ஏசி வகுப்பு பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சேவை நோக்கில் செயல்பட்ட ரயில் போக்குவரத்து தற்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுவது வேதனையைத் தருகிறது.

எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் போதிய பொது பெட்டிகளையும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE