ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தொண்டர்கள் அமைதி காக்க மாயாவதி வேண்டுகோள்!

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த இவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றின் சீருடையில் வந்த மர்ம நபர்கள் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கார்க் இன்று காலை தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் முன்பு சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர். இவர், 'தலித்துகளின் வலுவான குரல்' என கட்சியின் தலைவர் மாயாவதியால் அழைக்கப்பட்டவர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஆம்ஸ்ட்ராங் சடலம் உடற்கூறாய்வு நடைபெற்ற சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பும் அவரது தொண்டர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி, அமைதி காக்குமாறு தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி, அர்ப்பணிப்புள்ள, கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை இல்லத்துக்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான/தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங், உடலுக்கு அஞ்சலி செலுத்த, கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE