ஆம்ஸ்ட்ராங் கொலை: ஒன்றரை மணி நேரமாக தொடர்ந்த சாலை மறியல்; போராட்டக்காரர்கள் கைது!

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காலை சுமார் ஒன்றரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (54). சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த இவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் தலித் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் சடலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனையில் திரண்ட அவரது ஆதரவாளர்கள், இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியே பேருந்துகள், வாகனங்களில் சென்ற பயணிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட முயற்சிகள் மேற்கொண்டனர்.

மேலும், மாற்று வழிகளில் போக்குவரத்தை சீர் செய்வது குறித்தும் போலீஸார் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேரமாக மறியல் தொடர்ந்ததன் காரணமாக போக்குவரத்து மற்றும் மருத்துவமனைக்கு வரும் இதர நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார், குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE