அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?: ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வருவாய்த்துறை திடீர் நோட்டீஸ்

By காமதேனு

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, ஜூலை 25-ம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை வானகரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. அப்போது ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ( ஜூலை 11) காலை சுமார் 8.30 மணியளவில் இ-2 சென்னை ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்ற போது, அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு. கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் காவல்துறையினரைப் பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன், அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களைச் சேதப்படுத்தினர். இது தொடர்பாக பாசறை பாலச்சந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்த போது அவர்களைக் கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 பேரும், மற்றொரு தரப்பில் 24 பேரும் காயமடைந்தனர்.

மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 பேரும், மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இ-2 ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். கட்சி அலுவலத்தின் உரிமையைக் கோருவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலர் அறிக்கை அளித்தார்.

அதன்பேரில் , வருவாய் கோட்ட அலுவலர் (தெற்கு/ உட்கோட்ட நடுவர், தென் சென்னை) முதல் தகவல் அறிக்கை, மற்ற ஆவணங்களை ஆராய்ந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனில் இப்பிரச்சினை தீவிர சட்டம்-ஒழுங்குப் பாதிப்பையும், பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று கருதியதன் அடிப்படையில் இன்று கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, ஜூலை 25-ம் தேதி இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும்" எனக் கூறி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE