சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆர்டிஓ விஸ்வநாதன் நடத்திய ஆய்வின்போது, விதி மீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகாசி அருகே செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில், கடந்த வாரம் நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய 4 சிறப்பு குழுக்கள் அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். வருவாய்த்துறை மற்றும் பட்டாசு தனி வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு துறை சார்பிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
» சூதுபவள மணிகள் கண்காட்சி: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று தொடக்கம்
» அரசு மருத்துவக் காப்பீடு அட்டையால் எந்தப் பயனும் இல்லை: முன்னாள் காவல் துறையினர் வேதனை
அப்போது சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான அய்யப்பா ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான வெடி பொருட்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.
அத்துடன் மாரனேரியில் உள்ள ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அக்சயா ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் உற்பத்தி அறையின் சுற்றுச் சுவரில் விரிசல் ஏற்பட்டும், அனுமதி இன்றி செட் அமைத்தும், மரத்தடியிலும் பட்டாசு உற்பத்தி செய்ததும், உற்பத்தி செய்த பட்டாசுகளை திறந்த வெளியில் காயவைத்தது உள்ளிட்ட விதிமீறல்களுடன் ஆலை இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து இரு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.