'பொட்டச்சிங்ககிட்ட நான் பேச்சுவாங்கிகிட்டு இருக்கணுமா?': தூய்மைப்பணியாளர்களை ஆபாச அர்ச்சனை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்!

By பா.ஜெயவேல்

தூய்மை பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் வசைபாடும் பெண் கவுன்சிலர் கணவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இங்கு ஆண்களை விட பெண்களே அதிக அளவு உள்ளாட்சி பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். அது தான் இந்த மாநாட்டின் நோக்கம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார். மாநாடு முடிந்த ஒருவாரத்திற்குள்ளாகவே வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் கணவரின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

வேலூர் மாநகராட்சி 44-வது வார்டில் தூய்மை பணியாளர்கள் பணி செய்துகொண்டு இருக்கும்போது அப்பகுதிக்கு திமுக வார்டு கவுன்சிலர் தவமணியின் கணவர் தாமோதரன் வந்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கும், அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன், தரக்குறைவாக ஆபாசமான வார்த்தைகளால் கடுமையாகத் திட்டியிருக்கிறார். “கவுன்சிலர் பதவிக்காக 50 லட்ச ரூபாய் செலவு செய்துட்டு போற வர்ற, பொட்டச்சிங்ககிட்ட நான் பேச்சுவாங்கிகிட்டு இருக்கணுமா?” எனப் பேச ஆரம்பித்தவர் அடுத்துப் பேசியவையெல்லாம் அதிர்ச்சி ரகம். காதில் கேட்க முடியாத வார்த்தைகளைக் கொண்டு அவர் தூய்மைப் பணியாளர்களை வசைபாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், “நாங்கள் பணி செய்யவில்லை என்றால் கவுன்சிலர் கேட்கலாம். அல்லது மாநகராட்சி அதிகாரிகள் கேட்கலாம். ஆனால் இதற்குத் தொடர்பில்லாத கவுன்சிலரின் கணவர் எங்களை ஆபாசமாகப் பேசி மிரட்டுகிறார். கவுன்சிலரின் கணவர் தாமோதரன் மீது மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தூய்மைப் பணியாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் ” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE