> பள்ளிகள் திறப்பு: மே.27-ல் முக்கிய ஆலோசனை: கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில்தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஜூன் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். இதுசார்ந்த ஆலோசனைக் கூட்டம் மே 27-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், அலுவல் ரீதியாக பள்ளிகள் திறப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.
> தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கன முதல் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழையும், திங்கள்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
» சூதுபவள மணிகள் கண்காட்சி: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று தொடக்கம்
» அரசு மருத்துவக் காப்பீடு அட்டையால் எந்தப் பயனும் இல்லை: முன்னாள் காவல் துறையினர் வேதனை
அதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
> அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ‘ஷிப்ட்’ பணி: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.
> ராமர் கோயில் பேச்சு | மோடி மீது நடவடிக்கை கோரும் காங்.: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு அது இடிக்கும் என்று அபாண்டமாக பழி சுமத்திய பிரதமர் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “நம்மால் செய்ய முடியாததைச் சொல்லி பிரதமர் மோடி மக்களைத் தூண்டிவிடுகிறார். இது ஒருபோதும் நடக்காது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். எங்கள் அரசு வந்த பிறகு அனைத்தும் பாதுகாக்கப்படும். இதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. நாங்கள் அரசியலமைப்பை மட்டுமே பின்பற்றுவோம். மக்களை தூண்டிவிடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
> ராணுவத்தை காட்டிக் கொடுத்தது காங்கிரஸ்- மோடி: நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
> பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் | மவுனம் கலைத்த தேவகவுடா: தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காத மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் எச்.டி. ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எங்கள் குடும்பத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் எச்.டி. குமாரசாமி ஏற்கனவே பேசியிருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் அரசு தொடர வேண்டியது அவசியம். எனினும், எச்.டி.ரேவண்ணா மீதான வழக்குகள் அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டிகே சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி புகார் கூறியுள்ளார்.
> கேஜ்ரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமார் கைது: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
> கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்களுக்கு அறிவுரை: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
> 2026-ல் தம்பி விஜய்யுடன் கைகோக்க தயார்: சீமான்: “நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
> பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி: “பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை பாதியாக குறையும். தேர்தல் வெற்றிக்காக மாநில அரசுகள் பல இலவச திட்டங்களை அறிவித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.
பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.
பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது. பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.