சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பயோமெட்ரிக் மூலம் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து பணியாளர்களுக்கும் அவர் இன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ''மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அனைவரும் தவறாமல் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளிலும் வருகையை பதிவு செய்ய வேண்டும். காலை 10 முதல் 11 மணிக்குள் வருவோர் தாமதமாக வந்ததாகக் கருதப்படுவர்.
மாதத்துக்கு மூன்று முறைக்கு மேல் தாமதமாக வந்தால் ஒவ்வொரு தாமத வருகைக்கும் அரைநாள் விடுப்பு கழிக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் வருவோர் அரை நாள் விடுப்பு எடுத்ததாக கருதப்படுவர். காலையில் பதிவு செய்து, மாலையில் பதிவு செய்யவில்லையென்றால் அரைநாள் விடுப்பாக கருதப்படும். ஓ.டி. காரணமாக வெளியே சென்று வருவோர் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து சம்பளப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பயோமெட்ரிக்கில் பதிவு செய்யத் தவறினால் விடுப்பு அல்லது ஆப்சென்ட் ஆக கருதப்படும். வழித்தடங்களில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் புறப்படும்போதும், பணி முடித்த பின்னரும் வருகையை பதிவு செய்ய வேண்டும்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
» எஸ்.சி. எஸ்.டி. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர 9-ம் தேதிக்குள் விண்ணப்பம்: ஆட்சியர் அறிவிப்பு