முதல்வரின் பாதுகாப்பிற்காக நின்ற காவலர்களின் தடுப்பையும் மீறி, ஸ்டாலின் கார் அருகே செல்ல முயன்ற பெண்ணை காவல்துறையினர் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினார்கள். இதைக் கண்ட ஸ்டாலின் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்தவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதிக்கு வந்துள்ளார். திருப்பத்தூர் உருவாக்கப்பட்ட பிறகு அந்த மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தனியார்ப் பள்ளியில் நடைபெறும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். முதல்வரின் வருகைக்காகப் பள்ளி நுழைவு வாயிலில் பொதுமக்கள் மனுக்களுடன் காத்துக் கொண்டிருந்தனர். முதல்வரின் கார் தனியார் பள்ளி அருகே வந்தபோது மனு கொடுக்க காத்திருந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் தடுப்பையும் மீறி முதல்வர் கார் அருகே ஒரு பெண் செல்ல முயன்றார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் தங்கள் கைகளிலிருந்த மனுவைக் காட்டி கூச்சலிட்டும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். இதைக் கண்ட முதல்வர் காரை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் மனு கொடுக்க காத்திருந்த பெண்ணை அழைத்து மனுவைப் பெற்றுக் கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து அங்கிருந்த மாற்றுத் திறனாளி, முதியவர்கள் எனப் பலரும் முதல்வரின் கார் அருகே சென்று மனு கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.