புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக கட்சிக்குள்ளும், எம்எல்ஏ-க்களுக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதால் பாஜக அமைச்சர்கள் மவுனமாகியுள்ளனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. புதுச்சேரி அரசில் பாஜகவைச் சேர்ந்த செல்வம் பேரவைத் தலைவராகவும், உள்துறை அமைச்சராக நமச்சிவாயமும், குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சராக சாய் சரவணக்குமாரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மேலும் சில பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேட்சைகள், நியமன எம்எல்ஏ-க்கள் ஆகியோரும் தங்களுக்கு பதவி கோரிவந்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தங்களுக்கு பதவி கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தேர்தலில் பாஜக தோற்றது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ-க்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக அமைச்சர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். தங்களுக்கு எதிராகவே தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் கருத்து தெரிவிப்பதும் அவர்கள் அடக்கிவாசிக்க முக்கிய காரணம்.
புதுவை சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாஜக எம்எல்ஏ-க்களில் 3 பேர் ஒரு பிரிவாகவும், மற்ற 3 பேர் தனியாகவும் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ-க்களோடு, பாஜகவுக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் மற்றும் நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர். நியமன எம்எல்ஏ-க்களில் ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் சேரவில்லை.
» சேலம் அதிமுக பிரமுகர் படுகொலை பின்னணி முதல் அசாம் வெள்ள பாதிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
» புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இதனால் புதுவை பாஜக ரெண்டுபட்டு நிற்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் இருந்தார். ஆட்சியில் முதல்முறையாக பாஜக அங்கம் வகித்தது. சாமிநாதன் நீண்ட காலம் தலைவராக இருந்ததால் மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதியை மாநில தலைவராக நியமித்தது பாஜக தலைமை.
அவர் தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தோல்வியைச் சந்தித்தது. இதனால் மாநிலத் தலைவருக்கு எதிராகவே பாஜகவுக்குள் அதிருப்திக் குரல்கள் வெடித்துள்ளன. இதனால் அதிருப்தியாளர்கள் நீக்கப்படும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தற்போதைய தலைவரை வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதனால் கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.