சேலம் அதிமுக பிரமுகர் படுகொலை பின்னணி முதல் அசாம் வெள்ள பாதிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

> சேலம் அதிமுக பிரமுகர் படுகொலை - பின்னணி என்ன?: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் 62 வயது சண்முகம். சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு முன்னாள் தலைவராகவும், சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். தாதகாபட்டி அம்பாள் ரோட்டில் இருந்த கட்சி அலுவலகத்தில் இருந்த சண்முகம் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார். தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சென்ற சண்முகத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், சண்முகம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள், அதிமுக-வினர் தாதகாப்பட்டிக்கு திரண்டு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சண்முகத்தை கொலை செய்த மர்ம நபர்கள், திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சண்முகம் அலுவலகம் வந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தை கொலையாளிகள் பல நாட்களாக நோட்டமிட்டு, கொலையை நடத்துவதற்கான வீதிகளையும் பார்த்து வைத்து, சம்பவ இடத்தில் இருந்த இரண்டு தெரு விளக்குகளையும், வீதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை முன் கூட்டியே சேதப்படுத்தி உள்ளனர். சண்முகத்தின் தலையில் வெட்டியும், அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அதிமுக மாநகராட்சி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் , அப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்தும், சட்ட விரோதமான ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்பவர்களையும் கண்டித்து வந்தார். மேலும், இதன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தகவல் கொடுத்து வந்தார். கஞ்சா விற்பனைக்கும், லாட்டரி விற்பனைக்கும் இடையூறாக இருந்ததால், சண்முகத்தை அக்கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

> மெத்தனால் நெட்வொர்க்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் புதுச்சேரி மாதேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தனால் கண்டறியப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மாதேஷ் தனது வாக்குமூலத்தில், வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள செயல்படாத பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், விஏஓ முன்னிலையில் அந்த பங்குக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் விசாரித்தபோது, “முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மாதேஷ் தனது வாக்குமூலத்தில் சென்னையைச் சேர்ந்த ரசாயன நிறுவனத்திலிருந்து ஒரு பேரல் ரூ. 11 ஆயிரம் என 19 பேரல் மெத்தனாலை வாங்கியதாக தெரிவித்துள்ளார். அப்படி வாங்கி வந்த மெத்தனாலை ஒரு பேரல் 40 ஆயிரம் வீதம் விற்றுள்ளார். இதற்காக பெரிய நெட்வொர்க்கை வைத்திருந்ததாகவும், முதல் விற்பனையை கள்ளக்குறிச்சியில் செய்ததாகவும் மாதேஷ் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

> விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

> “திமுக அரசு பதவி விலக வேண்டும்” - அன்புமணி: “விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், இதை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

> பாமகவுக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்: “அதிமுகவின் நோக்கமும் பாமகவின் நோக்கமும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று கற்றுக்கொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவுக்கு உண்டு. எனவே, பாமகவின் மாம்பழ சின்னத்தில் அதிமுகவினர் வாக்களிக்கவேண்டும்”என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

> ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

> உ.பி நெரிசல் சம்பவம்: 6 பேர் கைது: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தலைமறைவான போலே பாபா, “ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்” என்று தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.

> ‘எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்’: இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா - சீனா இடையே எல்லைப் பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்துக்காக தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலம் முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

> தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: டி20 உலகக் கோப்பையுடன் வியாழக்கிழமை அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர், இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது இந்திய அணி வீரர்களுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் உடன் இருந்தனர்.

> அசாம், மணிப்பூரில் வெள்ளம் - 48 பேர் பலி: தொடர் கனமழை காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இரண்டாவது அலை வெள்ளத்தால் 29 மாவட்டங்களில் 16.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அசாமின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இதற்கிடையில், மணிப்பூரில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெள்ளப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அசாம் மற்றும் மணிப்பூருக்கு அதிக மனிதவளம், படகுகள் மற்றும் உயிர்காக்கும் பொருட்களை வழங்குவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE