திருவள்ளூர் - ஆர்.கே.பேட்டையில் 54 ஆக்கிரமிப்பு வீடுகள் அதிரடியாக அகற்றம்

By இரா.நாகராஜன்

திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 54 வீடுகளை இன்று காலை வருவாய்த் துறை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக இடித்து அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில், சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான நிலத்தில், பட்டியலின மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 106 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பட்டா வழங்கப்பட்ட நிலத்தில், பட்டா பெற்றவர்களில் 3 பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர்.

மற்றவர்கள் வீடுகள் கட்டாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும் பயனாளிகள் வீடுகள் கட்டாததால், அந்நிலத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிலத்தில், "அரசுக்குச் சொந்தமான இந்த நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது" என வருவாய்த் துறை சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நிலத்தில் இலவச வீட்டுமனை பெற்றவர்களில் பலர் கடந்த ஒரு மாதமாக ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் சிமென்ட், இரும்பாலான கூரைகள் கொண்ட வீடுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அவர்கள், இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ள தாங்கள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்தனர்.

அதுமட்டுமல்லாது, இலவச வீட்டுமனை பட்டாவை பெற்றவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் பட்டா நிலத்தை திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வீடுகளை இன்று காலை வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். திருத்தணி டிஎஸ்பி-யான விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இப்பணியில், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னின்று 54 வீடுகளை அதிரடியாக இடித்து அகற்றினர். அப்போது அந்த வீடுகளை கட்டி வருபவர்கள் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE