போதை பொருள் கடத்தல் கேந்திரமாக தமிழக சிறை: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: போதைப் பொருள் கடத்தல் கேந்திரமாக தமிழக சிறை மாறியுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெத்தம்பேட்டமைன் கடத்தலில்கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் என்பவர் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே `மெத்' சரக்குக்கான பிக்-அப் பாயின்டை அமைத்துள்ளார். போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இச்செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறிழைக்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் மீதும், அவர்களது ஆதரவு பெற்ற குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உளவுத் துறை, சட்டம்-ஒழுங்குமற்றும் மதுவிலக்குப் பிரிவுகளுடன் தற்போது சிறைத் துறையும் இணைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த சம்பவத்தைக் கண்டறிந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதுடன், தமிழக காவல் துறைக்கும், சிறைத்துறைக்கும் இதுபற்றிய விவரங்களை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில்,இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறைத் துறையும், காவல் துறையும் இனியாவது விழித்துக்கொண்டு சிறைவாசி யார், யாருடன்பேசினார், யார் அவருக்கு மெத்தம்பேட்டமைன் விநியோகித்தது, அதற்குப் பணப்பரிமாற்றம் எப்படிநடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த குற்றச் சம்பவத்திலாவது மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவுடன் செயல்படுபவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்.

போதை மருந்து கடத்தலுக்கு, துறைமுகங்கள், கூரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சக்கட்டமாக சிறைச்சாலையையே போதைப் பொருள்கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தியுள்ளது சமூகப் பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது. இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலைதள பதிவு: மேலும் தனது எக்ஸ் தளபக்கத்தில் பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது: பெருங்களத்தூரில் போதைப் பொருள் விற்பனையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு முடிவில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் 3 ஆண்டு காவல்துறையின் தோல்விகளில் இதுவும் ஒன்று என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இனியாவது அரசியல் குறுக்கீடின்றி தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம்வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE