`திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்'- அதிமுகவை விமர்சித்த ஸ்டாலின்!

By காமதேனு

``திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். ஆனால், திமுக அழிந்ததாக வரலாறு இல்லை'' என்று சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை குற்றம்சாட்டிப் பேசினார்.

அதிமுக சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக அதிமுகவினர் களேபரங்களில் ஈடுபட்டு வந்தனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

அதே வேளையில் சென்னை திருவான்மியூரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடைபெறுவதாக நினைத்து நாமெல்லாம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியும். அந்த பிரச்சினைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். ஆனால், திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. நாம் பெருமைப்படும் அளவிற்கு நடைபெறும் திராவிட மாடல் திருமணம் இது. திமுக தொண்டர்களின் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE