சென்னையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் கருத்து மோதல்கள் வெடித்தன. கூடாரம் விட்டு கூடாரம் தாவும் நிகழ்வுகளும் தொடர்ந்தன. பொதுக்குழுவை நடத்த விடமாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் என ஈபிஎஸ் ஆதரவாளர்களும் பொதுவெளியில் பேசிவந்தனர். இந்நிலையில் பொதுக்குழுவிற்குத் தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதே வேளையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி சி.பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை எதிர்த்து அவர் தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இருதரப்பிலும் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். “அதிமுக பொதுக்குழு தீர்மான ஏற்பாடு கூட்டத்தில் 23 வரைவுத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிமுக தலைமை பதவிகள் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படாமல் ஒற்றைத் தலைமை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான முறையில் பொதுக்குழு நடைபெறுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமை மாற்றத்தைக் கொண்டுவரக்கூடாது” என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து “ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை விடப் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவின் முடிவுகளைக் காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவின் பெரும்பான்மையான கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதுதான் ஜனநாயகம். பொதுக்குழுவிற்குப் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளின் படி பொதுக்குழு நடைபெறுவதால் , அதற்குத் தடை விதிக்கக்கூடாது” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி் கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்கு தடையில்லை என தீர்ப்பு அளித்துள்ளார். இது ஓபிஎஸ் தரப்பினருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.