மதுரை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தியது தொட்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே. நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பெங்களூரு நகரத்பேட்டையில் பேசும்போது, பொங்களூரு ராமேஸ்வரம் கபோ குண்டு வெடிப்பு சம்பவத்தை குறிப்பிட்டு, ‘தமிழகத்தில் பயிற்சி பெற்று வருபவர்கள் இங்கு வெடி குண்டு வைக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டார். மத்திய அமைச்சரின் சர்ச்சைக் குரிய பேச்சுக்கு தமிழத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இதையடுத்து தனது பேச்சுக்கு ஷோபாகரந்தலாஜே ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவு வெளியிட்டார். இதனிடையே தமிழர்கள், கன்னடர்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இதனால் ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மதுரை கடச் சனேந்தலை சேர்ந்த தியாகராஜன் என்பவர் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் ஷோபா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீஸார்
153, 153 (A), 505(1) (b), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்பு படுத்தி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளேன். இப்பேச்சு தொடர்பாக பெங்களூரு சிக்பேட்டை காவல் நிலையத்திலும் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
» “பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பில் அரசுக்கு எச்சரிக்கை தேவை” - இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்
அந்த வழக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அதே பேச்சுக்கு மதுரையிலும் என் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கபே வழக்கில் கைதான நபர் சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சென்னையில் சோதனை நடத்தியுள்ளது.
தமிழர்களை நான் அவதூறாக பேசவில்லை. எனவே மதுரை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் ஷோபா கூறியுள்ளார்.