மதுரை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இன்று (மே 18) மதுரை அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சி மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள சூலப்புரம் கிராமம், வருசநாடு மலைகளால் மூன்று பக்கமும் சூழப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூர் மக்கள் இம்மலைகளை கருப்பசாமி மலை என்றழைக்கின்றனர். இங்கு மிகப் பழமையான சிவப்பு மண்பாண்டங்கள், கறுப்பு மண்பாண்டங்கள், கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள், கார்னிலியன் (சூதுபவளம்) மணிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கருவிகள் உள்பட பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் மதுரை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி இன்று முதல் வரும் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமான மாணவர்கள் இந்தக் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் நம்மிடம் பேசுகையில், “சூதுபவள மணிகள் (கார்னிலியன்) சால்செடோனியின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். மலைப்படிமங்கள் மற்றும் கூழாங்கற்கள் மூலம் சூதுபவள மணிகள் உருவானதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நிறத்தின் அடிப்படையில் சார்ட் (பழுப்பு மஞ்சள்), கார்னிலியன் (சிவப்பு), கிரிஸோபிரேஸ் (கருப்பு பச்சை), ஆனிக்ஸ் (கருப்பு வெள்ளை அல்லது சாம்பல் வெள்ளை), ஜாஸ்பர் (மஞ்சள், சிவப்பு, பழுப்பு, சிவப்பு அல்லது கருப்பு) என்று சூதுபவள மணிகளில் பல வகைகள் உள்ளன.
» ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை: ஒரே வாரத்தில் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
» “தமிழகத்தில் கல்வி ‘கலைஞர்’ மயமாக்கப்பட்டு வருகிறது” - தமிழிசை குற்றச்சாட்டு
கி.மு 3 மில்லியன் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா மற்றும் மெசபடோமியாவில் பழமையான சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கார்னிலியன் மணிகள் என்ற சொல்லை முதலில் 1938-ல் மெக்யெய் என்பவர் பயன்படுத்தினார். கார்னிலியன் மணிகள் நிறம் மற்றும் வடிவமைப்பின் தோற்றத்தின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிவப்பு நிறமணிகள் மேலே வெள்ளை வண்ண ஓவியம். கருப்பு நிற மணிகள் மேலே வெள்ளை நிற வண்ணம். சிவப்பு நிற மணிகள் மேலே கருப்பு வடிவம் என் மூன்று வகைகள் உள்ளன” என்றார்.