கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: பயனாளிகள் பட்டியல் கேட்டு ஊராட்சி துணை தலைவர் நூதன போராட்டம் @ மதுராந்தகம்

By கோ.கார்த்திக்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் பயனாளர்களாக, ஊராட்சி நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியல் விவரங்களை பிடிஓ அலுவலகத்தில் தெரிவிக்காததால், அதே ஊராட்சியின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பிடிஓ அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் திமுகவை சேர்ந்த சந்திரபாபு தலைவராக உள்ளார். துணைத் தலைவராக கூட்டணி கட்சியான மதிமுகவைச் சேர்ந்த சத்யா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மேற்கண்ட ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில், அனைத்து வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளர்களை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி பயனாளர்களை தேர்வு செய்து பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், துணை தலைவர் தனக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுடன் பிடிஓ அலுவலகத்துக்குச் சென்று, மேற்கண்ட திட்டத்துக்கு தலைவர் வழங்கிய பயனாளர்கள் பட்டியலை காட்டுமாறு முறையிட்டுள்ளார். ஆனால், பிடிஓ அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பட்டியலை உங்களுக்கு வழங்கக்கூடாது என தலைவர் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதனால், துணை தலைவர் சத்யா 2 வார்டு உறுப்பினர்களுடன் பிடிஓ அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, பிடிஓ அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன், துணைத் தலைவர் கேட்ட பயனாளிகள் பட்டியலையும் அவருக்கு வழங்கினர். ஆனால், பட்டியல் ஒரு தலைபட்சமாக உள்ளதாகவும். தங்களுக்கு இதில் உடன்பாடில்லை எனவும் தெரிவித்து துணைத் தலைவரும் 2 கவுன்சிலர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைத் தலைவர் சத்யா, "ஊராட்சி மன்றத்தில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளர்கள் தேர்வு செய்து பட்டியல் பரிந்துரைக்க வேண்டும். அதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால், தலைவர் தனக்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்கள் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு முன்கூட்டியே பயனாளர்களை தேர்வு செய்துள்ளார். பின்னர், கண்துடைப்புக்கு எங்கள் முன்னிலையில் சில உறுப்பினர்களுடன் பட்டியல் தயாரித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்து நாங்கள் பிடிஓ அலுவலகத்தில் பட்டியல் கேட்டு முறையிட்டோம். முதலில் மறுத்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் பட்டியலை காட்டினர். ஆனால், அதில் பாரபட்சமாக பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால், அனைவரின் முன்னிலையில் பயனாளர்களை தேர்வு செய்து பிடிஓ அலுவலகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE