“பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பில் அரசுக்கு எச்சரிக்கை தேவை” - இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்

By ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

பழநியில் இன்று (ஜூலை 3) நடைபெற்ற இந்து வியாபாரிகள் நல சங்க அலுவலக திறப்பு விழாவில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பழநி கிரிவலப் பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதற்கு, இந்து முன்னணி சார்பில் நாங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறாம். அதே சமயம், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வியாபாரம் செய்வதற்கு அரசு வழி வகை செய்ய வேண்டும். இல்லையெனில், வியாபாரிகள், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். செங்கோல் குறித்து விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசன், மதுரையில் மாநகராட்சி மேயருக்கு செங்கோல் வழங்கும் விழாவில் எப்படி கலந்து கொண்டார்? நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில் இந்துக்கள் குறித்து ராகுல் காந்தி பேசியதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இந்து முன்னணி நீட் தேர்வை ஆதரிக்கிறது. கோவையில் பாதிரியார் ஒருவர் இந்து மத வழிபாட்டை இழிவுப்படுத்தி பேசியுள்ளார். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். பழநி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பது குறித்து எழுந்த சர்ச்சையை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

பஞ்சாமிர்தம் தயாரிப்பில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்." என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE