ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் தேவை: ஆதித் தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்

By ஆ.நல்லசிவன்

பழநி: ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜக்கையன் கூறியுள்ளார்.

பழநியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கையன் கூறியதாவது: "தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே, மத்திய அரசு நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதி என்பது அனைத்து மக்களுக்கும் சென்று சேரும்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சமூக நீதியை கேலிக் கூத்தாக மாற்றியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க,தமிழகத்தில் பூரண மது விலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்" என ஜக்கையன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE