சைபர் க்ரைம் பிரிவில் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா? - தென் மண்டல ஐஜி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: தென் மாவட்டங்களில் சைபர் க்ரைம் பிரிவில் போதுமான காவலர்கள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா என்பது குறித்து தென் மண்டல ஐஜி பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேர்ந்த மருத்துவர் பிரியா பிஸ்வ குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் பணிபுரிந்த தனியார் மருத்துவமனையில் ஹரிஹரன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். பின்னர் நானும் அவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினோம். ஹரிகரன் எந்த முதலீடும் செய்யவில்லை. நான் ரூ.6 கோடி வரை முதலீடு செய்துள்ளேன்.

எங்கள் நிறுவனம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்நிலையில் ஹரிகரனும், அவரது உறவினர்களும் என் அனுமதியில்லாமல் நிறுவன பணத்தை முறைகேடாக பயன்படுத்தினர். என் பணத்தை ஆன்லைன் விளையாட்டிலும் முதலீடு செய்துள்ளனர். இந்த மோசடி குறுித்து சென்னை, மதுரை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தேன்.போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லை. எனவே, மதுரை சைபர் க்ரைம் போலீஸாரிடம் உள்ள என் வழக்கை சென்னை சைபர் க்ரைமுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, "மதுரை உள்ளிட்ட தென் மண்டலங்களில் சைபர் க்ரைம் பிரிவில் எவ்வளவு காவலர்கள் உள்ளனர்? வல்லுநர்கள் போதிய அளவில் உள்ளார்களா? போதிய தொழில் நுட்பங்கள் உள்ளதா என்பது குறித்து தென் மண்டல ஐஜி பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE