கோயில் விழாக்களில் ஆபாச நடனத்தை தடை செய்க: கோவை ஆட்சியரிடம் மேடை நடன கலைஞர்கள் மனு

By இல.ராஜகோபால்

கோவை: கோயில் விழாக்களில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள மேடை நடன கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குழுவாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஒட்டுமொத்த மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் ராஜா, "கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முறையாக அனுமதி பெற வேண்டும். ஆபாச நடனங்கள் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக காவல் துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபுவும் கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் பாயும் என உத்தரவிட்டிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி ஆனந்தன் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனபால் ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் விழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தமிழ்நாடு முழுவதும் உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்த மேடை நடன கலைஞர்களில் சிலர் எம்ஜிஆர், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் போல் வேடமிட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE