`தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே'- அதிமுக தலைமையை தெறிக்கவிடும் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர் களேபரம்!

By மு.அஹமது அலி

அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே. அம்மா அவர்களின் அரசியல் வாரிசு… ஐயா ஓபிஎஸ்" என்ற ஓபிஎஸ் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி கூட உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று தலைமையில் நடைபெற்றது.

அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலக வாயிலில் நின்று கொண்டு தனித்தனியே பிரிந்து ஒற்றை தலைமை வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

உள்ளே ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், "ஒன்றுபடு, ஒற்றை தலைமையின் கீழ் ஒன்றுபடு" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த இரு தரப்பு நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மீண்டும் கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதில், "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே. அம்மா அவர்களின் அரசியல் வாரிசு… ஐயா ஓபிஎஸ் அவர்களே கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்த வாருங்கள்" என்ற வாசகங்கள் அடங்கி உள்ளது. மேலும், இதனை "அஇஅதிமுக ராமநாதபுரம் மாவட்ட உண்மை தொண்டர்கள்" ஒட்டியது என்று கீழே குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்லும் வழியில் இபிஎஸ் ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஓபிஎஸ் ஆதரவாக ராமநாதபுரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது அதிமுகவினரிடையே ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வருவதை காட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE