தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By KU BUREAU

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: கடந்த வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடிப் படகுகளில் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடந்த1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1974-ம் ஆண்டில் இருந்தே அப்போதைய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தபிரச்சினை நிலவுகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான தாங்கள் (ஜெய்சங்கர்) கடந்த ஜூன் 27-ம் தேதி கடிதம் எழுதியுள்ளீர்கள்.

திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை, அப்போது முழுவீச்சில் எதிர்த்தது.அத்தகைய எதிர்ப்பு தமிழக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு,இது சம்பந்தமாக மாநில அரசுடன்முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான்.

அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் மத்தியஅரசு மேற்கொண்ட அனைத்துநடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்தமுயற்சியையும் அது எடுக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE