இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகமீனவர்களை விடுவிக்க மீனவர் காங்., சிஐடியு வலியுறுத்தல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மீனவர் காங்கிரஸ் மற்றும் சிஐடியு வலியுறுத்தி உள்ளன.

இது குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”கடந்த இரண்டு வாரத்தில் பாம்பன், நாகப்பட்டிணம், ராமேசுவரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 படகுகளையும் 61 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மத்தியில் பாஜக ஆட்சி வந்ததிலிருந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது.

தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஒரு மைனாரிட்டு அரசாக பலவீனமாக இருப்பதாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாஜக தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி முற்றிலும் மாறான நிலைப்பாடை மேற்கொண்டு வருவது தான்.

இனியும் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு கள்ள மௌனம் சாதிக்காமல் இலங்கை கடற்படையினரால் கைப் பற்றப்பட்டுள்ள படகுகளையும், மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொவதுடன், இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தையையும் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) செயலாளர் சிவாஜி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் படகுகளையும், மீனவா்களையும் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடித்து வருகின்றனா்.

மத்திய, மாநில அரசுகள் கைது செய்யப்பட்ட மீனவா்கள், படகுகளை உடனே நிபந்தனையின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைது நடவடிக்கையை முற்றிலும் தவிா்க்கும் வகையில் இரு நாட்டு அரசுகள் பேச்சுவாா்த்தை நடத்தி மீன்பிடி தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE