“அங்கீகாரம் பெறாத மனநல காப்பகங்கள் மீது நடவடிக்கை” - கோவை ஆட்சியர் எச்சரிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: அங்கீகாரம் இல்லாமல் மனநல காப்பகம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக கல்வி அளித்தல், இயன் முறை தொழிற் பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று செய்து வருகின்றன.

மேற்கண்ட சட்டத்தின்படி, பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும். விதிமீறி செயல்படும் மாற்றுத் திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய இல்லங்கள், மனநல காப்பகங்கள் உள்ளிட்டவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்று பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE