அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டு: அதிமுகவுக்கு சாதகமா, பாதகமா?

By டி. கார்த்திக்

42 ஆண்டு கால அரசியல் பயணத்தில் முதல் முறையாக தமிழகத்து ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது பாஜக. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதைப் போல, ஊழல் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கட்சிகளே பெரும்பாலும் மாறி மாறிச் சொல்லிக்கொள்ளும். இதற்கு மாற்றாக இம்முறை பாஜக திமுக ஆட்சிக்கு எதிராக ஊழல் புகார் வாசித்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது.

இதன்மூலம், திமுக அரசு மீது பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் திரட்டுவதில் கோட்டையில் ஆட்கள் நுழைந்துவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதிமுகவைத் தாண்டி திமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூற பாஜகவே சரியான தேர்வு என்ற முடிவுக்கு ‘விசில்புளோயர்’ எனப்படும் ஊழலுக்கு எதிரானவர்கள் வந்துவிட்டார்களா?

விசில்புளோயர் யார்?

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தலைமைச் செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், திமுக. அதிமுக ஆதரவு அதிகாரிகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதேபோல எந்த ஆட்சியாக இருந்தாலும் ஊழலுக்கு எதிரானவர்கள், அரசு தவறான பாதையில் செல்கிறது என நினைப்பவர்கள், அரசை நல்வழிப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ‘விசில்புளோயர்’களும் உண்டு. புரியும்படி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ‘ரமணா’ படத்தில் அரசு வேலையில் இருந்துகொண்டே நாயகன் விஜயகாந்துக்கு ஊழல் புகார்களை அனுப்புவார்களே, அவர்களைப் போன்றவர்கள்.

இதேபோல அரசின் டெண்டரில் பங்கேற்று, அனைத்தையும் சரியாக செய்திருந்தும் தங்களுக்கு டெண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரங்களைத் திரட்டிக் கொடுப்பதும் உண்டு. சில தனிநபர் அல்லது அமைப்புகள் ஆர்.டி.ஐ. மூலம் தகவல்களைத் திரட்டி திட்டங்களில் முறைகேடுகள் இருந்தால், அதை வெளிப்படுத்தும் காட்சிகள் அவ்வப்போது நடப்பதுதான். இவர்கள் எல்லோருமே ‘விசில்புளோயர்’ என்ற வரையறைக்குள்தான் வருவார்கள்.

பொதுவாக இந்த ‘விசில்புளோயர்’ நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கும்போதோ, அமைச்சகத்தில் ஊழல் நடைபெறுவதாக கருதும்போதோ, அதிகாரிகள், பணியாளர்கள் விநியோகிப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என மோப்பம் பிடிக்கும்போதோ, அதற்கான ஆதாரங்களைத் திரட்டி ஊழலுக்கு எதிரான இயக்கங்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் பொதுவெளியில் பேசுவது உண்டு. சில ‘விசில்புளோயர்’ திரட்டிய ஆதாரங்களை தங்களுக்கு பரிட்சயமான பத்திரிகையாளர்களிடம் வழங்கி, அதுதொடர்பான செய்தியைச் செய்தித்தாளில் வரவழைப்பதும் உண்டு. இதில் மூன்றாவதாக, அரசியல் கட்சியிடம் ஆதாரங்களை வழங்கி, கட்சித் தலைவர்கள் மூலம் அரசுக்கு எதிராக ஊழல் புகார்களைப் பேச வைப்பதும் நடக்கும். தமிழகத்தில் கட்சியிடம் வழங்கும் ஊழல் புகார்கள் என்பது பெரும்பாலும் திமுக, அதிமுகவைச் சுற்றித்தான் நடக்கும்.

முக்கியத்துவம் பெற்ற பாஜக

அதிமுக ஆட்சி என்றால் திமுக பிரதான எதிர்க்கட்சியாகவும்; திமுக ஆட்சி என்றால் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாகவும் இருப்பதால், இந்த இரு கட்சிகளிடமும் ஊழல், முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ‘விசில்புளோயர்’ சுலபமாக வழங்கிவிடுவார்கள். அப்படி அவர்கள் வழங்கினாலும், கோட்டையில் பணியாற்றும் தங்களுடைய ஆதரவு அதிகாரிகள் மூலம் தகவல்களை சரிபார்த்துக்கொண்டே பொதுவெளியில் திமுகவோ அல்லது அதிமுகவோ பேசத் தொடங்கும்.

கடந்த ஓராண்டாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு ஊழல் புகார்களைக் கூறி ரெய்டு காட்சிகளை நடத்திக் காட்டியது. மாஜி அமைச்சர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது தனிக்கதை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு ரெய்டு விடும் சூழலில், திமுக அரசுக்கு எதிராக ஏதேனும் ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை இரும்பாக்கவே அதிமுக முயல வேண்டும். கடந்த காலத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கி கைது படலத்தை நடத்திக்காட்ட, நடக்காத விஷயங்களைக்கூட அதிமுக புகாராகக் கூறியிருக்கிறது. ஆனால், இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசுக்கு எதிரான முறைகேட்டுப் புகார்களை பொதுவெளியில் கொண்டு செல்ல முயலவில்லை. பொங்கல் பரிசில் ஊழல் என்று சொன்ன அளவோடு நின்றுகொண்டது.

இதற்கு மாறாக, பாஜக தலைவர் அண்ணாமலை, பொங்கல் பரிசு தொடங்கி அடுத்தடுத்து திமுக அரசு மீதான முறைகேட்டுப் புகார்களை அடுக்கி வருகிறார். அப்படித்தான், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை, வீட்டு வசதித் துறைக்கு எதிரான புகார்கள் அண்ணாமலையால் வாசிக்கப்பட்டன. இந்தப் புகார்கள் உண்மையா, பொய்யா; நீதிமன்றம் செல்லுமா; அப்படியே சென்றாலும் அது நிற்குமா என்பதையெல்லாம் தாண்டி, பாஜக இதை பிரதானப்படுத்திச் சொல்லியிருப்பதுதான் முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறது.

பேசுபொருளாக்கும் பாஜக

தமிழகத்தில் கட்சியை எப்படியும் வளர்த்தெடுக்கும் முடிவில் இருக்கும் பாஜக, நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக திமுக அரசு மீது விமர்சனக் கனைகளைக் கூறி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அமைதியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக அரசு மீதான விமர்சனங்களை பாஜக அதிகப்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் தொடங்கி காட்சி ஊடகங்கள் வரை தமிழகத்தில் பாஜக - வலதுசாரிகளும் திமுகவினரும் கருத்து மோதல்களில் ஈடுபடுவதும் தற்போது அதிகரித்திருக்கிறது.

சட்டப்பேரவையில் 66 எம்எல்ஏ-க்களை வைத்துக்கொண்டு வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தாலும், பாஜக கூறும் புகார்களை அதிமுகவால் ஏன் சொல்ல முடியவில்லை; ‘விசில்புளோயர்’ஸின் நம்பிக்கையை அதிமுக இழந்துவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இன்னொரு புறம் திமுக அரசு மீதான பாஜகவின் ஊழல் புகார்களுக்கு அதிமுகவிடம் இருந்து பெரிய ரெஸ்பான்ஸும் இல்லை. “அண்ணாமலை சொன்ன புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் பதில் சொல்லவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி கேட்டதோடு சரி.

அண்ணாமலை சாய்ஸ்

இதுதொடர்பாக கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. “தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதுவும் கடைசியாக 10 ஆண்டுகள் அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த முறை திமுக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் புகார்களைக் கூற ஒரு வகையில் அதிமுகதான் காரணம். முன்பு அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருந்தது. இப்போது இரட்டைத் தலைமை. திமுக அரசு மீது உள்ள புகாரை அதிமுகவிடம் கொடுக்க வேண்டும் என்றால் ‘விசில்புளோயர்’ யாரிடம் கொடுப்பார்கள்? ஈபிஎஸ் பெரும்பாலும் சேலத்தில் இருக்கிறார். ஓபிஎஸ் தேனியில் இருக்கிறார். இருவரும் ஒவ்வொரு திசையில் இருந்தால் அணுகுவதே கஷ்டம். அதிமுக கட்சி தலைமையகத்துக்குள் சென்றால், விடவே மாட்டார்கள். அதையும் தாண்டி அவர்கள் பார்வைக்கு புகார்களைக் கொண்டு சென்றால், இருவரில் யார் ஒருவரிடம் கொடுத்தாலும் இன்னொருவர் அதிருப்தி அடைவார்.
அடுத்து, திமுக அரசு மீதான இப்போதைய முறைகேடு புகார், முந்தைய அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படி இருந்தால், தாங்களும் அம்பலப்படுவோம் என்ற எண்ணத்தில் அதை இவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இதையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்துத்தான் ‘விசில்புளோயர்’ செயல்படுவார்கள். அந்த வகையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலைதான் திமுக அரசுக்கு எதிராக தீவிரமாக விமர்சனங்களை வைத்து வருகிறார். அதனால், அண்ணமலையை அணுகி ஆதாரங்களைக் கொடுத்திருப்பார்கள். அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவர் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை பொதுவெளியில் ஏற்படும். தற்போது திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை செயல்படும் விதமும் அவரை நோக்கி ‘விசில்புளோயர்’ஸை நகர்த்தியிருக்கும்.

‘விசில் புளோயர்’ மட்டுமல்ல... அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் தற்போது ஓரங்கட்டப்பட்டிருப்பார்கள். அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மேலே வந்திருப்பார்கள். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வர மறுப்பதால், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, ஆதாரங்களை எடுத்து பாஜகவிடம் கொடுக்கப் பலரும் இருக்கிறார்கள்.” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

பாஜகவின் டபுள் மாங்காய்

தற்போதைய சூழலில் ‘விசில்புளோயர்’ஸின் நம்பிக்கையை அதிமுக இழந்துவிட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது. அதை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சாமிநாதனின் ட்விட்டர் பதிவும் உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது. திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை ஊழல் குற்றச்சாடுகளைக் கூறிய இரு தினங்களுக்குப் பிறகு ஆஸ்பயர் சாமிநாதன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘திமுக மீது அண்ணாமலை வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அதிமுக காலத்தில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. நோட் திஸ் பாயின்ட் யுவர் ஹானர்’ என்று சொல்லி இருந்தார்.

ஆஸ்பயர் சாமிநாதன்

திமுக அரசு மீது அண்ணாமலை வெளிப்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தமிழக பாஜகவை பொறுத்தவரை முக்கியமான நகர்வுதான். ஊழலுக்கு எதிரானவர்களை பாஜகவை நோக்கி நகர வைத்திருக்கும் ஓர் உத்தியாகவே இது தெரிகிறது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலத் தலைமையை மாற்றும் பழக்கம் கொண்டவை. திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை அழுத்தத்தை அதிகரிக்கும் நிலையில், அவருக்குப் பிறகு பொறுப்புக்கு வருவோரும் அதைத் தொடர்வார்களா இல்லையா என்பதும் கேள்விக்குறிதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE