ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு... பணியில் இல்லாத மருத்துவர்: உடனே அதிரடி காட்டிய அமைச்சர்!

By மு.அஹமது அலி

மதுரை வாடிப்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்து பின்னர் சாலை மார்க்கமாக வத்தலகுண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, வாடிப்பட்டி அருகே நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரியிடம் பேசும் அமைச்சர்

ஆய்வின்போது, சுகாதார நிலைய நோயாளிகள் அறை, மருத்துவமனை வளாகம், உள்ளிட்ட பகுதிகளை சோதனையிட்ட அமைச்சர், அதிகாரிகள் வருகை குறித்து கேட்டறிந்தார். அச்சமயம், அய்யங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் பூபேஷ் குமார் என்பவர் உரிய தகவல் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு இருந்தவாரே தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிக்கு வராமல் இருந்த மருத்துவ அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் ஆய்வின் போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE