கூடலூர்: யானை தாக்கி காயமடைந்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி பழங்குடியின மக்கள் மறியல்

By ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை தாக்கி பலத்த காயமடைந்த பழங்குடியின தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி பழங்குடியின மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர் சோலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால், வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேவர் சோலைக்கு உட்பட்ட கவுண்ட கொல்லி பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜான் (35) என்பவர் யானை தாக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்து அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயம் பலமாக இருந்ததால் உதகையிலிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவையில் ஜானுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்காததைக் கண்டித்தும், சீராக மின்சாரம் வழங்கக் கோரியும், துண்டிக்கப்பட்ட குக்கிராம சாலைகளை உடனே சீரமைக்கவும், சாலைப் பணிகளை தரமாக மேற்கொள்ளவும், வன விலங்கு – பொதுமக்கள் மோதலை வனத்துறையினர் தடுக்க வலியுறுத்தியும், வேகமாக பரவி வரும் டெங்குவை தடுக்க மருந்து தெளிக்கக் கோரியும் பழங்குடியினர் இன்று தேவர் சோலை 4 வது மைல் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் பேரூராட்சித் தலைவர் வள்ளி ஆகியோர் பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிட வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE