திருத்தணி | உண்டியல் காணிக்கை எண்ணும் போது ரூ.1.15 லட்சம் திருட்டு: 2 பேர் கைது

By KU BUREAU

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, ரூ.1,15,790 திருடப்பட்டது தொடர்பாக பெண் ஊழியர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களில் நிரம்பிய காணிக்கைகள் எண்ணும் பணி, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் வளாகத்தில் நேற்று காலைமுதல், மாலை வரை நடைபெற்றது.

கண்காணிப்பு கேமரா சகிதம் நடைபெற்ற இப்பணியில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதற்கிடையே காணிக்கைகள் எண்ணும் பணியை நேற்று காலை கண்காணிப்பு கேமரா மூலம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கண்காணித்த போது, கோயிலின் நிரந்தர ஊழியரான, ஆர்.கே.பேட்டையை அடுத்த வீரமங்கலத்தைச் சேர்ந்த தேன்மொழி (35), தற்காலிக துப்புரவு பணியாளரான ஆர்.கே.பேட்டை அருகே உள்ள நாகபூண்டியை சேர்ந்த வைஜெயந்தி (44) ஆகிய 2 பேர் காணிக்கை பணத்தில் சுமார் ரூ.1,15,790-ஐ திருடியது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீஸார், தேன்மொழி, வைஜெயந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE