சென்னை: இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் எக்ஸ் வலைதள பதிவு:
அமலுக்கு வரும் புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அமலில் இருந்த சட்டங்களில் சில திருத்தங்களை செய்தே அமல்படுத்தி இருக்கலாம்.
புதிய சட்டங்களில் சில மேம்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன.அவற்றை நாங்கள் வரவேற்றுள்ளோம். அதையும் சட்டத் திருத்தம் மூலமாகவே செய்திருக்கலாம்.
புதிய குற்றவியல் திருத்த சட்ட மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. ஆனால், அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. இச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வித ஆக்கபூர்வமான விவாதமும் நடத்தப்படவில்லை.
நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர் கூட்டமைப்புகள், வழக்கறிஞர்கள் என பலரும் இந்தசட்டத் திருத்தம் தொடர்பாக பல விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளனர். 3 சட்டங்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு அரசு பதில் அளிக்கவில்லை.
எனவே, குற்றவியல் நீதிநிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்துவதே இந்த சட்டங்களின் முதல் தாக்கமாக இருக்கும். அடுத்து, பல்வேறு நீதிமன்றங்களிலும் பலசவால்கள் உருவாகும். காலப்போக்கில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்