புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் மீது புகார் தெரிவிக்க கட்சி மேலிடத் தலைவர்களை சந்திக்க பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 8 பேர் டெல்லி புறப்பட்டனர்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களையும், பாஜக ஆறு இடங்களையும் வென்றது. அதையடுத்து மூன்று நியமன எம்எல்ஏக்களை பாஜக நியமித்தது. 3 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது. அவர்களுக்கு பல வாக்குறுதிகள் தரப்பட்டன. சில ஆண்டுகளுக்கு பிறகு இதில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் பதவி கோரினர்.
பின்னர் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். ஆனால் கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இக்கோரிக்கை பற்றி மவுனமாக இருந்து வந்தார். மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக புதுச்சேரியில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர்.
இவர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர். அந்த புகைப்படங்களை ராஜ் நிவாஸ் வெளியிடவில்லை. இதில் ஆளுநர் மீது நேரடியாகவே குற்றம் சாட்டி ஆடியோவும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனால் வெளியானது. பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதியாலும் எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
» ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை ஆட்சியரிடம் காங். மனு
இவ்விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக் பாபு, வெங்கடேசன், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லிக்கு இரவு புறப்பட்டனர்.
இது பற்றி பாஜக எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்டதற்கு, "ஆளுநரிடம் தெரிவித்த பிரச்சினை தொடர்பாக பாஜக தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க டெல்லி செல்கிறோம். டெல்லி சென்று முதல்வர் பற்றியும் இங்குள்ள சூழல் தொடர்பாகவும் தெரிவிக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.