ஈரோடு: பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஈரோட்டில் ஒரே வாரத்தில் 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால், தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், அந்தியூர்,அத்தாணி,கோபி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வாழை மரங்களை வருவாய்த் துறை மற்றும் தோட்டக் கலைத்துறையினர் இணைந்து கணக்கெடுத்துள்ளனர்.
120 ஹெக்டேர் பாதிப்பு: இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், அந்தியூர், அம்மாப் பேட்டை ஆகிய வட்டாரங்களில் கடந்த 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், லட்சக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
வருவாய்த் துறையினருடன் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், 269 விவசாயிகளுக்குச் சொந்தமான, 120 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆட்சியர் மூலம், வருவாய்த் துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றனர்.
» விழுப்புரம் அருகே கோலியனூரில் புத்துவாயம்மன் கோயில் தேரோட்டம்
» “தமிழகத்தில் கல்வி ‘கலைஞர்’ மயமாக்கப்பட்டு வருகிறது” - தமிழிசை குற்றச்சாட்டு
இதுவரை கிடைத்ததில்லை: இது குறித்து கீழ்பவானி பாசனசபை நிர்வாகி பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது: வாழை ரகங்களில் செவ்வாழை 16மாதங்கள், தேன் வாழை 12 மாதம், மொந்தை10மாதம் என அறுவடைக் காலம் மாறுபடும்.அதற்கு ஏற்ப செலவும் மாறுபடும். சராசரியாக ஒரு ஏக்கர் வாழை பயிரிட்டு, அறுவடை வரை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.20லட்சம் வரை செலவாகும்.
பலத்த காற்றால் வாழைமரங்கள் சேதமாகும் போது, வருவாய்த் துறை, தோட்டக்கலை,வேளாண்மைத் துறையினர் கணக்கீடு மட்டும் எடுக்கின்றனர். இதற்கு காப்பீடு, அரசு இழப்பீடு எதுவும் இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்ததில்லை. விவசாயிகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தையாவது அரசு வழங்க வேண்டும்.
மற்ற பயிர்களைப் போல் அல்லாமல், விழுந்த வாழை மரங்களைச் சுத்தம் செய்யவே ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு செலவாகும். எனவே,வாழை மரங்களுக்கு காலதாமதமின்றி அரசு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும், என்றார்.