சென்னை: நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரியா சாஹு சுகாதாரத் துறை செயலராகவும், க.மணிவாசன் நீர்வளத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு விவரம்: சுற்றுலா, அறநிலையங்கள் துறை செயலர் கே.மணிவாசன் நீர்வளத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த சந்தீப் சக்சேனா தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித் துறை செயலராக இருந்த பி.சந்திரமோகன், சுற்றுலா, அறநிலையங்கள் துறை செயலராகவும், கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலராக இருந்த மங்கத்ராம் சர்மா, பொதுப்பணித் துறை செயலராகவும், ஊரகவளர்ச்சித் துறை செயலராக இருந்த பி.செந்தில் குமார், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த சுப்ரியா சாஹு சுகாதாரத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை செயலராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலராகவும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் பிரதீப் யாதவ், உயர் கல்வித் துறை செயலராகவும், தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
» யானைகளை தடுக்கும் கழற்சிக்காய் செடி: வனத்துறை ஆய்வில் தகவல்
» யானைக்கவுனி மேம்பாலத்தின் மற்றொரு வழிப்பாதையை அடுத்த வாரம் திறக்க முடிவு
தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண் இயக்குனராக இருந்த ஏ.ஜான் லூயிஸ், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனர் பொறுப்பை, செய்தித்துறை இயக்குனர் ஆர்.வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார்.
வீட்டுவசதித் துறை கூடுதல் செயலர் எம்.விஜயலட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராகவும், நில சீர்திருத்தத் துறை ஆணையர் என்.வெங்கடாச்சலம், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டி.என்.ஹரிஹரன், நில சீர்திருத்தத் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் சிறப்பு செயலர் ஆர்.லில்லி, போக்குவரத்துத்துறை சிறப்பு செயலராகவும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த எம்.சாய்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (டிஐஐசி) தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராகவும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டி.எஸ்.ஜவஹர், சமூக சீர்திருத்தத்துறை செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார், என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதில், க.மணிவாசன் ஏற்கெனவே, பொதுப்பணி, நீர்வளத்துறைகள் ஒன்றாக இருந்த போது, அத்துறைகளின் செயலராக இருந்தார். அதேபோல் பி.சந்திரமோகனும் ஏற்கெனவே சுற்றுலா, அறநிலையங்கள் துறை செயலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.