ரூ.265 கோடியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பிய பழங்குடியினர் நலத்துறை!- ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

By மு.அஹமது அலி

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல் மீண்டும் அரசுக்கே ஒப்படைத்துள்ளது. மேலும், வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுவதாக ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் என்பவர் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறைக்கு ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்திருந்தார். அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ஆயிரத்து 310 கோடிகள் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், ஆயிரத்து 45 கோடிகள் வரை மட்டுமே திட்டங்களுக்கு செலவு செய்துள்ளது. மீதம் இருந்த 265 கோடிகள் வரை செலவு செய்யப்படாமல் அரசு கஜானாவிற்கே திரும்ப ஒப்படைத்துள்ளது.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து கடந்த 2019-20 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.10 கோடியும், அதற்கு அடுத்த 2020-21 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.67.77 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைக்கு ரூ.58.17 கோடி மற்றும் பேரூராட்சிகள் துறைக்கு ரூ.4.05 கோடி என்று அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ. 129.9 கோடிகள் வரை பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் எஸ். கார்த்திக்

இது குறித்து எஸ்.கார்த்திக் காமதேனுவிடம், "பழங்குடியினர் மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்பு வீடு, கல்வி, சுகாதார திட்டங்கள், மின்சாரம், சாலை, வசதிகள் என்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முழுமை பெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், இந்த மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தாமல் திரும்ப ஒப்படைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில அரசு மட்டுமே ஆண்டிற்கு ரூ.3000-4000 கோடி வரை நிதி ஒதுக்கும் நிலையில், பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்தே ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது என்பது வேதனை அளிக்கிறது" என்கிறார்.

மேலும், "ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடிகள் நிதி மீண்டும் பழங்குடியினர் மக்களின் நலனுக்கு செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை நூறு சதவீதம் பயன்படுத்துவதற்கு சிறப்புக்குழு அமைத்து தொடர் கண்காணிப்பு செய்து, பழங்குடியினர் மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்" என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE