சென்னை: யானைக்கவுனி மேம்பாலத்தில் மற்றொரு வழிப்பாதை பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்பாதையை அடுத்த வாரம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்திருந்தது. வலதுபுறம் பேசின்பாலம் பணிமனையும், இடதுபுறம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனையும் இணைக்கும் விதமாக, சென்ட்ரல் பணிமனையின் வெளியே செல்லும் பகுதியில் இந்த பாலம் அமைந்திருந்தது. பழமையான இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்திருந்ததால், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து, 2016-ம் ஆண்டு மூடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு இப்பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, இப்பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.
முன்பு, இப்பாலத்தில் 50 மீட்டர் நீளமுள்ள பகுதி ரயில்வே துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்தப்பகுதியை இடித்துவிட்டு, 156.12 மீ அளவுக்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ அளவுக்கு சாய்தளசாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையில் பக்கம் 165.24 மீ மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ நீளத்துக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் மூலதன நிதியின் கீழ் ரூ.30.78 கோடி மதிப்பிலும், ரயில்வே மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில், ஒரு வழிப்பாதை முடிக்கப்பட்டு மார்ச் 15-ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. முதல்கட்டமாக, இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் மற்றொரு வழிப்பாதை அடுத்த வாரம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மேம்பாலத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆறாவது கர்டர் (இரும்புபாலம்) அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேலும், அனைத்து பணிகளும் ஒரு சில நாட்களில் நிறைவடைந்துவிடும். எனவே, அடுத்த வாரம் மேம்பாலத்தின் மற்றொரு பாதை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.