சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடும், தாயுள்ளத்தோடும் பணியாற்றி அனைவரையும் காக்கும் பணியில் இரவு, பகல் பாராது அயராது உழைக்கின்றனர். மருத்துவர்கள் பணி என்பது போற்றுதலுக்குரிய பணி.
கடந்த காலங்களில் கரோனாவின் தாக்கம் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும்போது தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் பணியில் மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை நன்றியோடு நினைவு கூர்வோம்.
தன்னலம் இல்லாமல் பணியாற்றும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால் மேலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
» தனியார் நிறுவனங்களின் சுரண்டலை தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம்: ராமதாஸ் வலியுறுத்தல்
சமூகத்துக்கு மருத்துவர்கள் செய்யும் மகத்தான பங்களிப்புக்கும், தன்னலமற்ற சேவைக்கும், அயராத முயற்சிக்கும், நம்பிக்கை அளிக்கும் பணிக்கும் பாராட்டுகள். தேசிய மருத்துவர் தினத்தில் மருத்துவர்களும், அவர்களது குடும்பமும் மென்மேலும் சிறக்க, வளர, உயர மனம் நிறைந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.