புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு

By KU BUREAU

சென்னை: மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்த உள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஏ) ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் மத்திய அரசு மாற்றியமைத்து, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.இவற்றுக்கு வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியில் பெயரிட்டு, அதே மொழி தலைப்புகளைத் தான் இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

உண்ணாவிரதம்: ஜூலை 1-ம் தேதியில் (இன்று) இருந்து இச்சட்டங்களை செயல்படுத்துவதென அறிவித்துள்ளது. இதுபற்றி விவாதித்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு “இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 348-க்குஎதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்து, முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று” மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை வலியுறுத்தி, ஜுலை 1-ம் தேதியன்று கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றங்களின் வாயில்களில் உண்ணாவிரதம் இருப்பது என்றும், அன்று முதல் ஒரு வாரத்துக்கு மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்றப் பணியிலிருந்து விலகி இருப்பது என்றும், ஜூலை 2-ல் நீதிமன்றங்கள் முன்பும், ஜூலை 3-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், திருச்சியில் ஜூலை 8-ல் வழக்கறிஞர் பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

திரும்ப பெற வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு, மத்திய அரசு தன்னிச்சையாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்றும் முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும் கோரி, வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE