டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

By KU BUREAU

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தில் 1997-ம் ஆண்டு கொலையான முருகேசன் உள்ளிட்டோரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: வரும் செப்டம்பர் 17-ல் பெரியார் பிறந்த தினத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்படும். மேலவளவில் உயிரிழந்தோருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கள்ளச் சாராயம் நாடு முழுவதும் உள்ளது. டாஸ்மாக் கடைகளாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். மெத்தனால் மாஃபியா கும்பலைக் கண்டுபிடித்து, அவர்களை தண்டிக்க வேண்டும்.

தமிழக அரசு முதலில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பின்போது நேரில் சென்று விசாரித்தபோது, அங்குள்ள மக்கள் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கூறினர். டாஸ்மாக் கடைகளை மூடினால், மக்களிடம் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

மாணவர்களிடம் நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்றுதான் அவர் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் நடக்கும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதைக் கண்காணிக்க தனி பிரிவைத் தொடங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE