சென்னை: உணவில் குறைந்த அளவு உப்பைஎடுத்து கொள்ள நாம் பழக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை, சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனமான 'ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்' ஆகியவை சார்பில் குறைந்த உப்பு உணவை எடுத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயிலரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்றுநடைபெற்றது.
பேக் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவுகள் பதிக்கப்பட்ட லேபிள்களின் அவசியம் குறித்தும், இதில் சட்டபூர்வமான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் கலந்து கொண்டு பயிலரங்கை தொடங்கி வைத்தார். மேலும் உப்பு குறைப்பு குறித்த சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு கையேட்டையும், ‘உப்பை குறைப்போம், வாழ்வை வளர்ப்போம்’, ‘அதிக உப்பு = ரத்த குழாய் பாதிப்பு’ வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டார்.
» வெங்கையா நாயுடு வாழ்க்கை ஊக்குவிப்பாக இருக்கும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
» பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு: புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் நடந்தது
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், சக்கரை வியாதிகள் போன்றவை பெரும் பிரச்சினையாக கருதப்படுகின்றன. இந்நோய்கள் மூலம் ஏற்படும் மரணங்களை தவிர்க்கவும், இந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் மிகவும் முக்கியானது உண்ணும் உணவு பொருட்களில் உப்பின் அளவை குறைப்பது. உலகளவில் ஏற்படும் இறப்பு விகிதத்தில் 60 சதவீதத்தை எளிதாக குறைக்கலாம் என்றால் அது உப்பை குறைவாக பயன்படுத்துவதன் மூலமே குறைக்க முடியும்.
நாம் எந்த அளவுக்கு உப்பை எடுத்து கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டு உணவுகளை விட பீட்சா, பாஸ்டா போன்ற உணவுகளில் கூடுதலாக உப்புகள் உள்ளன. இதனை குறைக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களின் முகப்பில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவை லேபிளில் தெரிவிக்க வேண்டும்.
முடிந்த அளவு குறைந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ள பழக வேண்டும். முதலில்கஷ்டமாக இருக்கும். பின்னர் பழகிவிடும். இதன்மூலம் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும். அதனால் உண்டாகும் பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ‘ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அமித் ஷா, சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை தலைவர் ராஜன் ரவிச்சந்திரன், அறங்காவலர் ஆர்.சுந்தர், ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்