கோவையில் 3 இடங்களில் நடைபாதை மேம்பாலங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

By டி.ஜி.ரகுபதி

கோவை: பொதுமக்கள் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க மூன்று இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல சாலையோரங்களில் மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், குனியமுத்தூர், வடகோவை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மறுபுறம் சாலையை பாதுகாப்பாக கடக்க நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

காந்திபுரம் நஞ்ப்பா சாலையில், நகரப் பேருந்து நிலையம் அருகே முன்பு இரும்பினால் ஆன நடைபாதை மேம்பாலம் இருந்தது. நஞ்சப்பா சாலையில் மேம்பாலம்கட்டும் பணிக்காக இந்த இரும்பு நடைபாதை மேம்பாலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள நகரப்பேருந்து நிலையம் அருகேயும், அவிநாசி சாலையில் உள்ள முக்கிய போக்குவரத்து சந்திப்பான லட்சுமி மில் சந்திப்பிலும், உக்கடத்தில் பேருந்து நிலையம் அருகேயும் மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தன.

அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட இடங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. காவல்துறை சார்பில் போக்குவரத்துப் பிரிவின் கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன், மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “லட்சுமி மில் சந்திப்பு, உக்கடம், காந்திபுரம் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சாலையில் எந்த இடத்தில் நடைபாதை மேம்பாலம் அமைப்பது, அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா என்பது உள்ளிட்டவை தொடர்பாக கலந்தாலோசித்தனர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE