மனைவிக்கு எம்பி `சீட்'டை குறிவைக்கும் மாசெ... தடுக்கும் முன்னாள் எம்எல்ஏ: ராமநாதபுரம் அதிமுகவில் களேபரம்!

By மு.அஹமது அலி

மாநிலங்களவை எம்.பி-க்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட செயலாளர் மனைவிக்கு எம்.பி சீட் வேண்டும் என்று ஒரு தரப்பும், அவருக்கு வழங்கக் கூடாது என்று இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

அதிமுக தலைமை யாரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் இரு தலைமையும் முடிவெடுக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என தங்களது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பி வருவது போல் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியின் மனைவி கீர்த்திகாவுக்கு தான் சீட் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன்

இச்சூழலில், பரமக்குடி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் தன்னுடைய முகநூலில், "பணத்துக்காக கட்சிப் பதவியை விற்பவர்கள், தேர்தலின் போது தலைமை கொடுத்த பணத்தை ஆட்டையைப் போட்டவர்கள், திமுகவினருடன் கூட்டணி அமைத்து சுயலாபத்திற்காக பணம் சம்பாதிப்பவர்கள், கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் சாதாரண தொண்டனுக்கு கிடைத்தால் மகிழ்ச்சியே" என பதிவிட்டிருந்தார்.

சதன் பிரபாகரன் பதிவை பார்த்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் ஒரு பிரிவினர் வசை பாடினாலும், இன்னொரு பிரிவினர் மாவட்ட செயலாளர் முனியசாமி குடும்பத்திற்கு எம்.பி. சீட் கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்கலாம் என்றும், மாவட்ட செயலாளர் முனியசாமி கட்சிக்கு விரோதமாக செய்த விவகாரங்களையும் பதிவிட்டுள்ளனர். இப்படி லோக்கல் கட்சியினர் எதிர்ப்பை மீறி கீர்த்திகாவிற்கு ராஜ்ய சபா கிடைத்தால் அது தலைமைக்கே வெளிச்சம் என்கின்றனர்.

இருவரின் மோதல் குறித்து மாவட்டத்தின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய போது, "தற்போதைய, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆரம்பத்தில் சிறப்பாக கட்சிப்பணி ஆற்றி வந்ததால் அவரது மனைவி கீர்த்திகாவிற்கு பரமக்குடி நகராட்சி சேர்மன் பதவி ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுகவிலும் கீர்த்திகாவுக்கு மாநில மகளிரணி பொறுப்பும் வழங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட கீர்த்திகாவிற்கு வாய்ப்பு கொடுத்த போதிலும் தோல்வியுற்றார்.

ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி

மேலும், அதிமுக ஆட்சியில் பரமக்குடி சேர்மனாக கீர்த்திகா இருந்த போது ஊழல் நடைபெற்றதாக விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்தது. அது தற்போது, வரை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றால் கீர்த்திகாவிற்கு சிக்கல் ஏற்படுவது உறுதி. அப்போது, முனியசாமி மாவட்ட செயலாளராக இல்லை. அதிமுகவில் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு சொந்தமாக இடம் தேர்வு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போது, அமைச்சராக இருந்த சுந்தர்ராஜனும், மாவட்ட செயலாளராக இருந்த ஆனிமுத்துவும் இணைந்து பட்டணம் காத்தான் என்ற ஊரில் 27 சென்ட் அளவிலான இடத்தை தேர்வு செய்து தலைமைக்கு கொடுத்திருந்தாங்க. கடந்த பத்தாண்டுல பலபேரை மாவட்டச் செயலாளர்களாக மாற்றி அமைத்ததனால் அந்த விஷயத்தை கட்சியினர் மறந்துட்டாங்க. சமீபத்தில் அந்த இடத்தை முனியசாமி விற்று விட்டதாகவும் அது குறித்து கண்டன போஸ்டர்களையும் ஒட்டியிருந்தனர்.

இது குறித்து, மாவட்ட செயலாளர் முனியசாமியிடம் தலைமை விசாரணை நடத்தினாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உறவு முறை என்பதால் மாவட்ட செயலாளர் பதவி பறி போகாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து, கட்சி பதவிக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுத்தது, கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவினருக்கு காண்ட்ராக்ட் கொடுத்த விவகாரம் என ஆதாரப்பூர்வமாக தலைமைக்கு புகார் அனுப்பி வைத்தும் ஓபிஎஸ் கடைக்கண் பார்வையால் தப்பித்து வருகிறார் முனியசாமி.

முனியசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனக்கு எதிராக யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டனையும் ஓரங்கட்டி அவருக்கு மீண்டும் சீட் கிடைக்க விடாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவி கீர்த்திகா போட்டியிட்ட முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்திய முனியசாமி மற்ற மூன்று தொகுதிகளில் கவனம் செலுத்தாததால் மொத்த தொகுதியிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.

இதில் கொடுமை என்னவென்றால், அதிமுக தலைமை தேர்தலுக்கு கொடுத்த பணம் உரியவர்களுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. தொடர்ந்து அதிமுக வசம் இருந்து வந்த தொகுதியான பரமக்குடியில் சதன் பிரபாகரன் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்துவிட்டார். இதன் காரணமாக சதன் பிரபாகரன் மனம் வெறுத்து இப்பதிவை பதிவிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. லோக்கல் கட்சியினர் எதிர்ப்பை மீறி கீர்த்திகா மாநிலங்களவை எம்பி சீட் வாங்கி விட்டால் அது ஓபிஎஸ் ஆதரவு என்பது வெட்ட வெளிச்சமாகும்" என்றனர்.

இது குறித்து மாஜி எம்எல்ஏ சதன்பிரபாகரனிடம் கேட்டோம், "யாரை குறிப்பிட்டும், யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் நான் இதனை பதிவிடவில்லை. மாறாக, கட்சித்தலைமை நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கட்சி நல்வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் போட்டு உள்ளேன்" என்கிறார் சூசகமாக. இருப்பினும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமியின் கட்சி விரோத செயல்பாடுகள் என்று ஆதாரப்பூர்வமான 15 குற்றச்சாட்டுகளுடன் கூடிய பட்டியல் ஒன்றையும் எடப்பாடியிடம் சதன்பிரபாகர் வழங்கி உள்ளாராம்.

சதன் பிரபாகரன் முகநூல் பதிவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE