பேரறிவாளன் விவகாரத்தால் உடையுமா திமுக - காங்கிரஸ் கூட்டணி?

By டி. கார்த்திக்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் 30 ஆண்டுகள் சிறைவாசம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் பேரறிவாளவன். நன்றி தெரிவிக்க தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை அரவணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததைப் பார்த்த காங்கிரஸார் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் கொப்பளிக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலையால் திமுக - காங்கிரஸ் உறவில் ஏற்பட்டிருக்கும் சிறிய அதிர்வலையைப் பயன்படுத்தி கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று பாஜக முயற்சிக்கிறது. அதுபலிக்குமா அல்லது நீர்த்துப்போகுமா?

பேரறிவாளன் விடுதலையானது தங்களால் தான் என திமுகவும், அதிமுகவும் போட்டிபோடுகிறது. இந்த விவகாரத்தில் தங்கள் பங்களிப்பையும் சுட்டிக்காட்டி மதிமுக தொடங்கி புதிய தமிழகம் வரை பிற அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் பேரறிவாளன் விடுதலையை தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்த்து வருகின்றன. பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடும் அளவுக்கு இறங்கியதை காங்கிரஸ்காரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இருப்பினும், கூட்டணிக்கு பங்கம் வராத வகையில் காங்கிரஸார் செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிராகப் போராட்டம், கருத்து என காங்கிரஸார் சாத்வீகமாக வெடித்தாலும், அவருடைய விடுதலைக்கு மத்திய அரசைக் காரணம் காட்டுவதில்தான் கவனம் செலுத்துகிறது காங்கிரஸ். ஆனால், பேரறிவாளன் விடுதலையில் மூத்த வழக்கறிஞரை தமிழக அரசு நியமித்ததையும், பேரறிவாளனுக்கு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பரோல் வழங்கியதை எல்லாம் காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது. “என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்” என்று ராகுல் காந்தி அறிவித்துவிட்ட பிறகும் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இதுபற்றி இப்படி கருத்து சொல்லியிருந்தார். “ராஜீவ் காந்தி தனது உயிரை காங்கிரஸுக்காக அல்ல, நாட்டுக்காக தியாகம் செய்தார். அவரது கொலையாளிகளை அவர்களின் அற்ப, மலிவான அரசியலுக்காக நீதிமன்றத்தில் விடுவிக்கும் சூழ்நிலையை இன்றைய அரசு (மத்திய அரசு) உருவாக்கினால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. இது ராஜீவ் காந்தியைப் பற்றிய கேள்வி அல்ல, கொல்லப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிய கேள்வி” என்று மத்திய அரசைதான் சாடியிருந்தார் சுர்ஜேவாலா. பேரறிவாளன் விடுதலையில் திமுக அரசின் பங்களிப்பு குறித்து மறந்தும் உச்சரிக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.

25 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி திமுகவை பந்தாட முனைந்த வரலாறெல்லாம் உண்டு. 1997-ம் ஆண்டில் ராஜீவ் மரணம் குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் தன்னுடைய இடைக்கால அறிக்கையில், திமுக மீது சில கருத்துகளை முன் வைத்தது. ‘ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு திமுக மறைமுக ஆதரவு அளித்தது. மு. கருணாநிதி அரசு (1989-91) மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளால் புலிகளுக்கு மறைமுக ஆதரவு இருந்தது என்ற முடிவு தவிர்க்க முடியாதது’ என்று ஜெயின் கமிஷன் சொன்னதுதான் தாமதம்.

அன்று காங்கிரஸ் ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணி அரசிலிருந்து திமுக அமைச்சர்களை விலக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது காங்கிரஸ். இதை ஏற்காததால்தான் ஐ.கே. குஜ்ரால் அரசு கவிழ்ந்து 1998-ல் தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவானது. அதற்கு முன்பே 1991-ல் ராஜீவ் காந்தி மரணம் நடந்தபோது, ‘மதுரையில் தாயைக் கொல்ல நினைத்தவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் மகனைக் கொன்று விட்டார்கள்’ என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து திமுகவை ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி வெற்றி பெற்றது காங்கிரஸ் - அதிமுக கூட்டணி.

ராஜீவ் காந்தி கொலையில் திமுகவை எந்த அளவுக்கு பலவீனப்படுத்த வேண்டுமோ அத்தனை வேலைகளையும் கடந்த காலத்தில் செய்திருக்கிறது காங்கிரஸ். ஆனால், இன்று காலச் சக்கரம் மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் நெருக்கமான முதன்மையான கூட்டணி கட்சியாக திமுக இருந்து வருகிறது. எனவே, பேரறிவாளனை அரவணைத்தைக்கூட காங்கிரஸ் தலைவர்களால் சிறு விமர்சனமாக வைக்க முடியவில்லை. ’கூட்டணி வேறு கொள்கை வேறு’ என்று சமாளித்துப் பேசவே காங்கிரஸ் தலைவர்கள் முயல்கிறார்கள். இணையத்தில் களமாடும் கதர்ச்சடை தொண்டர்கள்தான் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிராக ஆவேசமாக எழுதி வருகிறார்கள். ‘பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை விரும்பவில்லை’ என்று தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு பதவி விலகியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

அதேவேளையில் பேரறிவாளன் விடுதலை விஷயத்தை வைத்து காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று பாஜக முயற்சிக்கிறது. ‘திமுக கூட்டணியிலிருந்து வெளியேற தயாரா? உங்களுக்கு ராஜீவ் காந்தி முக்கியமா, ராஜ்ய சபா சீட்டு முக்கியமா? பேரறிவாளனை அரவணைக்கும் திமுகவுடனான கூட்டணியை ராஜீவின் ஆன்மா மன்னிக்குமா’ என்றெல்லாம் தமிழக பாஜக தலைவர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி, கதர்சட்டைகளை உசுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே உரசல் ஏற்படும் அளவுக்கு ‘செக்’ வைத்து பாந்தமாக விளையாடி வருகிறது பாஜக.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசனிடம் பேசினோம். “எழு பேரை நீதிமன்றமே விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம். இதில் அரசியல் நிர்பந்தங்கள் இருந்தால் ஏற்க மாட்டோம் என்று கே.எஸ். அழகிரி ஏற்கெனவே சொல்லியிருந்தார். இன்று உச்ச நீதிமன்றம்தான் பேரறிவாளனை விடுவித்திருக்கிறது. பிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? பேரறிவாளனாவது 12-வது குற்றவாளி. ஆனால், மகாத்மா காந்தி கொலையில் முதல் குற்றவாளியாக இருந்த கோட்சே விடுதலையாகாமல் இருக்க காங்கிரஸ் என்ன செய்தது?

2000-ம் ஆண்டில் சோனியா காந்தி மன்னித்ததால் தான் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்’ என்று ராகுல் காந்தி இரண்டு முறை சொல்லிவிட்டார். ராஜீவ் குடும்பத்தினரே சொன்ன பிறகு காங்கிரஸார் ஏன் எதிர்க்க வேண்டும்? ராஜீவ் கொலை வழக்கே முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியிடம் பதிலே இல்லை. ராஜீவ் மரணத்துக்குப் பிறகு 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி. இரண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி இருந்திருக்கிறது. ராஜீவ் கொலை தொடர்பாக பன்னோக்கு விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா? இதில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை.

இதை வைத்து திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. காங்கிரஸின் உத்திகளை எளிதாக தோற்கடிக்க முடியும் என்பதை பாஜக பல முறை நிரூபித்துவிட்டது. இந்த விஷயத்தில் காங்கிரஸை உணர்வுபூர்வமாகத் தூண்டிவிட்டு பாஜக சீண்டுகிறது. இவர்களும் தாங்களாகவே சென்று மாட்டிக்கொள்கிறார்கள். ‘சோனியா, ராகுலே மன்னித்துவிட்டார்கள்’ என்று காங்கிரஸ் பேசினால் பாஜக அடங்கிவிடும். இவர்கள் பேசிக்கொண்டே இருப்பதால்தான் பாஜக அதில் எண்ணெய் ஊற்றுகிறது. இதனால். காங்கிரஸ் கட்சிக்குதான் பாதிப்பு ஏற்படுமே ஒழிய திமுகவுக்கு அல்ல” என்கிறார் குமரேசன்.

பேரறிவாளன் விடுதலை என்பது ஒரு டீஸர்தான். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள இன்னும் ஆறு பேரும் விரைவிலேயே விடுதலை ஆவதற்கான வாசல் பேரறிவாளன் மூலம் திறந்துள்ளது. அது நடந்தால் காங்கிரஸ்காரர்களை இன்னும் சூடேற்றலாம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்க பாஜக இந்த விஷயத்தை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தலாம். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதில் என்ன பேசினாலும், சோனியாவோ, ராகுலோ கருத்து எதுவும் தெரிவிக்காத வரை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பங்கமும் வராது என்பதை பாஜகவினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE