ஹெச்.ராஜாவிற்கு எதிராக விசிகவினர் பழநியில் என்ன செய்தார்கள் தெரியுமா?

By மு.அஹமது அலி

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவின் உருவபொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு சார்பாக இடும்பன்குளத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், காவல்துறையினர் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது பேசிய அவர், "டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களைக் கொளுத்துவேன் என்று பேசிய விசிக தலைவர் திருமாவளவனை எல்லாம் கைது செய்யாத போலீஸார், என்னை கைது செய்கிறது" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து ஹெச். ராஜா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று திரண்டனர்.

ஹெச். ராஜாவின் உருவப்படத்தை எரித்த விசிகவினர்

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் குறித்து அவதூறு பேசிய ஹெச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உருவப் படத்தையும், உருவ பொம்மையையும் தீயிட்டுக் கொளுத்தினர். தொடர்ந்து, பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் எரிக்கப்பட்ட உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக தொண்டர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE