சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த சென்னை போலீஸ்

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் நுங்கம்பாக்கத்தில் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தொழில் ரீதியாக ஈக்காட்டுதாங்கலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் இன்று சிவசங்கர் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் தனது கொரியர் நிறுவனத்துக்கு வந்துள்ளார்.

அப்போது, தனது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணக் கட்டு காணாமல் போனதைத் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, தான் வந்த வழியிலேயே போய் பணத்தை தேடியுள்ளார். இதற்கிடையில், காசி திரையரங்கம் அருகே ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார், ரூ.50 ஆயிரம் பணக் கட்டு கீழே கிடந்ததைக் கண்டனர். உடனே அதை மீட்டு அந்த பணக்கட்டில் இருந்த வங்கியின் விவரங்களைப் பார்த்து, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசினர்.

பின்னர், அந்த பணத்தை எடுத்த சிவசங்கரின் தொலைபேசி எண்ணை வங்கியின் மூலம் பெற்றுக் கொண்டு, சிவசங்கரை தொடர்பு கொண்ட போலீஸார், அவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். தவறவிட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை மீட்டுக் கொடுத்த போலீஸாருக்கு சிவசங்கர் நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE