திருவள்ளூர் | புகையிலை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

By KU BUREAU

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான சட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டங்களில் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அதிகாரிகள் மத்தியில் தெரிவித்ததாவது: உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு, உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ளும் கூட்டு புல தணிக்கை ஆகியவற்றின்போது, இரு துறையினரும் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகளின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும்.

அவ்வாறு உரிமம் ரத்து செய்யப்படும் கடைகள் தொடர்பான அறிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பித்து, கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்தலை தடுக்க அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டங்களில் திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மீரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE