‘இந்தியாவில் கலவரம் வெடிக்க வெகு நாட்கள் இல்லை’ - எச்சரிக்கும் சீமான்!

By பா.ஜெயவேல்

“மக்கள் போராட்டங்களால் படிப்படியாக இலங்கையில் கலவரம் வெடித்தது. அதுபோல, இந்தியாவில் கலவரம் வெடிக்க வெகு நாட்கள் இல்லை“ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கம் தமிழ்நாடு விடுதலைப் படை. இந்தப் படையின் மூத்த முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் புலவர் கலியபெருமாள். அவரது 15-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பெட்ரோல் விலை ஏற்றம், நூல் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என தனித்தனியாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. இவையெல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் இலங்கையில் கலவரம் வெடித்தது. இந்தியாவில் 80 சதவீத மக்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். வரி உயரும்போது வாடகை அதிகரிக்கிறது. அரசிற்கு வரிப் பெருக்கம் இருக்கிறது. ஆனால், எங்களுக்கு வருமான பெருக்கம் இருக்கிறதா? மக்கள் போராட்டங்களால் படிப்படியாக இலங்கையில் கலவரம் வெடித்தது. அதுபோல, இந்தியாவில் கலவரம் வெடிக்க வெகு நாட்கள் இல்லை.

‘நான் போன் செய்தாலே, பிரதமர் மோடி என்னுடன் பேசுகிறார்’ என்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் முக்கியப் பிரச்சினைகளுக்கு இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி கண்ட பிறகும் போஸ்ட்மேன் வேலையைத்தான் ஸ்டாலின் செய்கிறார். பிரபாகரன் ஒரு மகாத்மா என பாஜகவினர் பேசிவருகிறார்கள். அதற்கு இங்கிருக்கும் பாஜக தீர்மானம் இயற்றுமா? இந்து ஈழம் அமைப்போம் என்கிறார்கள். பிரபாகரன் இருந்தபோது ஏன் இதைச் சொல்லவில்லை. தமிழர் இந்துவே இல்லை என நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்து ஈழம், சந்து ஈழம் என இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வரும் இந்து, சீக்கியர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்குகிறது. 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாதா?” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE