இந்த வாதைகளெல்லாம் நீங்கும்: சைவப் பிரியர்களே உங்களுக்கும் வந்துவிட்டது ஆட்டுக்கால் சூப்!

By கி.பார்த்திபன்

கை, கால் வலித்தால் ஆட்டுக்கால் சூப்பு, சளிப்பிடித்தால் கோழி சூப்பு குடிங்க எனக் கூறுவது வழக்கம். ஆனால், அசைவப் பிரியர்களுக்கு மட்டுமே இந்த வகை சூப்புகளை சுவைப்பர். அதேவேளையில் சைவப் பிரியர்களுக்கு எந்த சூப்பும் இல்லையே என்ற ஏக்கமும் உள்ளது. ஆனால், சைவப் பிரியர்களுக்காவே ‘சைவ ஆட்டுக்கால்’ உண்டு என்றால் யாரும் நம்பமாட்டார்கள். நம்பாவிட்டாலும் சைவ ஆட்டுக்கால் இருப்பது உண்மை தான் என்கின்றனர் கொல்லிமலை மக்கள்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு எனும் ஒரு வகை மூலிகைக் கிழங்கு கிடைக்கிறது. இந்த மூலிகைக் கிழங்கு, ஆட்டுக்கால் போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் மேல்புறத்தில் ‘பொசுபொசுவென’ உள்ள தோலை நீக்கி விட்டு அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சூப் வைத்து குடித்தால் ஆட்டுக்கால் சூப்பே தோற்றுவிடும் என்கின்றனர் கொல்லிமலை மக்கள்.

முடவன் ஆட்டுக்கால் கிழங்கு

இதுகுறித்து கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் கிழங்கைக் கொண்டு சூப் தயாரித்துக் கொடுப்போர் கூறுகையில், "கொல்லிமலை வனப்பகுதியில் பரவலாக முடவன் ஆட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது. இது ஒரு வகை மூலிகைக் கிழங்கு. வனத்துறையினர் அனுமதியுடன் இந்தக் கிழங்கை வெட்டி எடுத்து வருகிறோம். பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போன்ற தோற்றம் இருப்பதால் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கிறோம்.

இதில் சூப் வைத்துக் குடித்தால் மூட்டு வலி நீங்கும் என்பதால் முடவன் என, சேர்த்து முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கிறோம். கிழங்கின் மேல்தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சூப் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப் தயாரிப்பதில் தக்காளி, புளி சேர்க்கக்கூடாது. கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த சூப்பை குடிக்க தவறுவதில்லை. இதன் சுவை ஆட்டுக்கால் சூப் போலவே இருப்பதாகவும் தெரிவிப்பர். சூப் குடிப்பதற்காக கொல்லிமலை வருவோரும் உண்டு. கொல்லிமலையில் பரவலாக இந்த சூப் கிடைத்தாலும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி போன்ற இடங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. அருவிக்கு ஏறி, இறங்கிச் சென்று குளித்துவிட்டு வருவோர் இந்த சூப்பைக் குடித்தால் புத்துணர்ச்சி பெறுவர். இதற்காக இங்கு விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.

எஸ்.பூபதிராஜா

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் எஸ்.பூபதிராஜா கூறுகையில், "முடவாட்டுக் கிழங்கு அல்லது முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படும் இக்கிழங்கு கொல்லிமலையில் கிடைக்கிறது. இந்த மூலிகைக் கிழங்கு சூப் வைத்து குடிப்பதால் கை, கால் மூட்டு வலி நீங்கும் என்பது உண்மை தான். சேலம் மாவட்டம் சேர்வராயன் (ஏற்காடு) மலையிலும் இந்த கிழங்கு கிடைக்கிறது. எனினும், கொல்லிமலையில் அதிகம் கிடைக்கிறது" என்றார்.

காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் ‘முடவன் ஆட்டுக்கால்’ கிழங்கு செடி கொல்லிமலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’ என, அழைக்கப்படும் இக்கிழங்கு மலைப்பகுதியில் விளையக்கூடிய பாலிபோடியேசியே கும்பத்தைச் சேர்ந்த ஒருவகை புறணிச் செடியாகும். இவை பெரிய மரங்களின் மேல் படரும் ஒட்டு இனத்தைச் சார்ந்தது. இந்தக் கிழங்குச் செடி மண்ணில் வளராது.

பாறைகளிலும், மரங்களின் மீதும் தான் படர்ந்து வளரும். டிரைனேரியா குர்சிபோலியோ என்ற தாவரவியல் பெயரில் இச்செடியின் வேர்தான் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரக்கூடிய தன்மை கொண்டது என, தாவரவியல் ஆய்வாளர்கள், சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டு வலி மட்டுமின்றி செரிமான பிரச்சினைகளும் குணமாகும் எனவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE